Last Updated : 06 Feb, 2022 06:51 PM

 

Published : 06 Feb 2022 06:51 PM
Last Updated : 06 Feb 2022 06:51 PM

வீடியோ, போஸ்டரில் வைரல் முயற்சி: குழந்தைகள் பாதுகாப்புக்கு 'அரண்' - புதுக்கோட்டையில் கவனம் ஈர்க்கும் முன்னெடுப்புகள்

வீடியோவில் பங்கேற்ற மாணவிகளோடு ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு வீடியோ மற்றும் போஸ்டர்களானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிப்பதற்காக போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்கவும், பாதுகாப்பதற்காக அரசிடம் உள்ள சட்ட, திட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனையில் மாணவ, மாணவிகளைக் கொண்டு கடந்த 2 மாதங்களாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட விடியோவானது நேற்று வெளியானது.

ஒளிப்பதிவுக்காக இடம் தேர்வு, மாணவர்களின் குரல் பதிவு, எடிட்டிங் ஆகிய பணிகள் ஆட்சியரின் ஆலோசனையிலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கென கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து ஆட்சியர் கவிதா ராமு கூறியது: "குழந்தைகள் மற்றும் மாணவர்களின் உரிமை, பாதுகாப்பு, சட்ட உதவி, பாலியல் நலக் கல்வி, மனநலம், உடல் நலம், பாலின சமத்துவம், கற்றல் தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்து 18004252411 எனும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பிரத்யேக கட்டணமில்லா எண்ணுக்கும், 9443314417 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம். இதுதவிர, 1098-ல் குழந்தைகள், 14417-ல் மாணவர்கள் மற்றும் 181-ல் மகளிரும் உதவி பெறலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு பணிகளை பல்வேறு துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ளும் வகையில் எனது (ஆட்சியர்) தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களை உள்ளடக்கி 'அரண்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்து அறிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில உறுதிமொழியுடன்கூடிய, 'அரண்' எனும் பெயரில் மாணவர்கள் மற்றும் மாணவிகளைக் கொண்டு இரு மொழிகளில் இரு வேறுவிதமான வீடியோவும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் இதை உறுதிமொழியாக ஏற்க செய்யுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் பெற்றோர்களை உள்ளடக்கி இருக்கும் வாட்ஸ்அப் குரூப்களில் பகிருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆட்சியரின் முன்மாதிரி தயாரிப்பு வீடியோ மற்றும் போஸ்டர்களானது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x