Published : 06 Feb 2022 04:23 PM
Last Updated : 06 Feb 2022 04:23 PM
என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காகப் பாடுகிறேன் என்று பணம் கூட வாங்காமல் தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் பற்றி சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிரபு.
பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பற்றிய நினைவலைகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. தமிழிலும் லதா மங்கேஷ்கர் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். 1950லேயே அவர் குரல் தமிழில் ஒலித்தாலும் 80களில் இளையராஜா தான் அந்தக் குரலை தமிழ் ரசிகர்கள் மனங்களில் பதியும் வண்ணம் செய்தார்.
ஆனந்த் என்ற திரைப்படத்தில் ஆராரோ ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார்.
அந்தப் பாடல் பற்றி சில சுவாரஸ்யத் தகவலை நடிகர் பிரபு தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பகிர்ந்துள்ளார்.
எனது அண்ணன் ராம்குமார் தான் ஆனந்த் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்றுவது ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரோ பாடலைப் பாடிச் சென்றார். அந்தப் படத்தில் அப்பாடலைப் பாடியதற்காக அவர் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் மூத்த அண்ணன் சிவாஜி கணேசனுக்காக பாடுகிறேன் என்று கூறி அப்பாடலை அவர் பாடிச் சென்றார். லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் என் தந்தையின் தீவிர ரசிகைகள். அவர்கள் என் தந்தையை அண்ணா என்றே அன்புடன் அழைத்தனர்.
இந்த பந்தம் 1960ல் உருவானது. அப்பாவின் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு லதா மங்கேஷ்கர் சென்னை வந்தார். அன்று தொடங்கியது அப்பாவுக்கும் லதா சகோதரிகளுக்குமான பந்தம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகினோம். அவர் அவ்வப்போது எங்களுக்கு ஏதேனும் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். அவர் மருத்துவமனையில் அனுமதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார். கடவுளர், ஷீரடி குரு பாபா, எனது அப்பா என மாறிமாறி இவர்களின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார் என்றார்.
அன்னை இல்ல வளாகத்தில் ஒரு குட்டி பங்களா: எங்களின் அன்னை இல்ல வளாகத்தினுள் ஒரு சிறிய பங்களா இருக்கிறது. அதுதான் எங்களுக்கும் லதா மங்கேஷ்கருக்குமான உறவின் சாட்சி. சென்னை வரும்போது லதா மங்கேஷ்கர் தங்கிச் செல்வதற்காகவே அதைக் கட்டினார்கள். அப்பா இரண்டே மாதங்களில் அதைக் கட்டச் செய்தார். லதா மங்கேஷ்கருக்கு ஓட்டல் உணவு பிடிக்காது. ஆகையால் அம்மாவே அவர் கையில் அவருக்கு சமைத்துக் கொடுப்பார். அப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லாம் இப்போது போல் சுலபமாகக் கிடைக்காது என்பதால் அம்மா அவர்களுக்காக ஃப்ளாஸ்கில் சுடு தண்ணீர் கொடுத்து அனுப்புவார். லதாவும் பதிலுக்கு தீபாவளி, விழாக்காலங்களில் எங்கள் அனைவருக்கும் துணிகளும், பரிசுகளும் அனுப்புவார். கடந்த தீபாவளி வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது.
ராஜா மனைவியை அழவைத்த லதாவின் குரல்.. லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய பாடல்களில் எங்கிருந்தோ அழைக்கும் பாடல் மிகவும் முக்கியமானது. என் ஜீவன் பாடுது பாடலை இளையராஜா அவரது மனைவிக்கு இசைத்துக்காட்டியபோது லதாவின் குரலைக் கேட்டு அவர் கண்ணீர் சிந்தினாராம். லதா மங்கேஷ்கர் குரலில் ஏதோ மாயம் இருப்பதாக இளையராஜா தன்னிடம் கூறியதாகச் சொல்கிறார் இயக்குநர் சுகா.
அதேபோல், வளையோசை பாடலும் இளையராஜா கமலிடம் கண்டிஷன் போட்டு உருவாக்கிய பாடல். அந்தப் பாடலை அவர் லதா மங்கேஷ்கர் தான் பாட வேண்டும் என்று கூறியிருந்தாராம்.
தமிழில் சில பாடல்கள் தான் என்றாலும் கூட லதா மங்கேஷ்கர் நினைவிலிருந்து நீங்காத பாடல்களாக பாடிச் சென்றுள்ளார்.
கட்டுரை ஆதாரம்: 'தி இந்து' ஆங்கிலம் (ப.கோலப்பன்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...