Published : 06 Feb 2022 04:52 AM
Last Updated : 06 Feb 2022 04:52 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கே சென்று, அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்டவைகளில் வாய்ப்பு அளிப்பதாக உறுதி யளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கவுள்ளதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட கடும் போட்டி
திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், வார்டுகளில் போட்டியிட திமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, முன்னாள் கவுன்சிலர்கள் உட்படஅந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இதனால், பல் வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். சிலர் வேறுகட்சி களில் இணையும் முயற்சியிலும், சிலர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவும் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளை, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் நேரில் சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கூறியதாவது:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த வார்டுகளில் இருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் கட்சியில் அவர்கள் ஆற்றிய பணிகளைப் பார்த்து கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒருசில நிர்வாகிகள் மனகசப்புடன் இருப்பார்கள். எனவே, அவர்களை நேரில் சந்தித்து பேசி சமா தானப்படுத்தி வருகிறோம்.
நிர்வாகிகள் சமாதானம்
இதோடு முடிந்து விடுவதில்லை. அடுத்ததாக கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்டவைகளில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளித்து வருகிறோம். எனவே, அவர்களும் சமாதானமாகி, தேர்தல்பணியாற்ற முன்வந்துள்ளனர். 10 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு அதிமுகஅரசே காரணம் என்பதை மக்களிடம் சுட்டிக்காட்டியும், திமுக அரசின் சாதனைகளைக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தெற்கு மாவட்டச் செயலா ளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வாய்ப்பு அளிக்கப்படும். அல்லது கட்சி பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. எனவே, அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தல் பணியாற்றிட வேண்டுமென்பதை நிர்வாகி களிடம் நேரில் சென்று வலியுறுத்தி வரு கிறோம்.
ஒற்றுமையுடன் செயல்படுகிறோம்
அதன்படி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒற்றுமையுடன் இணைந்து எங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். வீடுகள்தோறும் சென்று வாக்கு சேகரிக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்து பிறகு இந்த குறுகிய காலத்தில் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment