Last Updated : 06 Feb, 2022 10:09 AM

 

Published : 06 Feb 2022 10:09 AM
Last Updated : 06 Feb 2022 10:09 AM

இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் இலவச அமரர் ஊர்தி சேவையில் கோவை முதலிடம்: பயன்பெற விரும்புவோர் 155377 என்ற எண்ணை அழைக்கலாம்

கோவை

கரோனா இரண்டாம் அலையின்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை, சொந்த மாவட்டத்துக்கோ, மாநிலத்துக்கோ தனியார் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்ல அதிகப்படியான கட்டணம் வசூலித்தனர். இக்கட்டான அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு கைகொடுத்தது அரசின் 24 மணிநேர இலவச அமரர் ஊர்தி சேவை. தமிழகத்தில் மொத்தம் 220 இலவச அமரர் ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 16 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

வந்த அழைப்புகள் மூலம் பெரும்பாலானோரின் (99 சதவீதம்) உடல்களை எடுத்துச் சென்றதில், கோவையில் செயல்படும் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் முதல் இடத்தில் உள்ளன. கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையில் கோவையில் இருந்து 11,104 அழைப்புகள் வந்ததில், மொத்தம் 11,035 உடல்கள் பல்வேறு மாவட்டங்கள், ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கோவைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது உடல்களை எடுத்துச்செல்ல உதவுமாறு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவையின் 155377 எண்ணுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை மற்ற நாட்களைவிட 4 மடங்கு அதிகரித்தது. அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இந்த சேவையைப் பயன்படுத்தி கொண்டு செல்ல முடியும். இறந்தவரின் பெயர், வயது, கொண்டுசெல்ல வேண்டிய இடம் போன்ற தகவல்களை அளித்தால் போதுமானது. அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று, உயிரிழந்தவர்களின் உடல்களையும் இலவசமாக ஏற்றிச்செல்கிறோம். சடலத்துடன் பயணிக்க இருவருக்கு மட்டுமே அனுமதியுள்ளது.

மாதந்தோறும் 900 உடல்கள்

ஒரே ஓட்டுநரே நெடுந்தூரம் வாகனத்தை ஓட்ட முடியாது. எனவே, எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமோ, அந்த மாவட்டத்தில் உள்ள வாகனத்துக்கு தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்கள் பாதி வழியில் வந்து உடலை அந்த வாகனத்துக்கு மாற்றி எடுத்துச்சென்றுவிடுவார்கள். அனைத்து இலவச அமரர் ஊர்தி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.

இதில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. கோவையில் மட்டும் மாதந்தோறும் சுமார் 900 உடல்களை பல்வேறு ஊர்களுக்கு இலவசமாக எடுத்துச்செல்ல உதவி வருகிறோம். சாலை விபத்துகள், ரயில் மோதி நடைபெறும் விபத்துகளில் உயிரிழப்பவர்களை எடுத்துச்செல்ல உதவுவதில் அரசின் அமரர் ஊர்தி ஓட்டுநர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x