Published : 23 Apr 2016 03:06 PM
Last Updated : 23 Apr 2016 03:06 PM
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் ஆஜராகலாமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் விக்டர் வில்லியம். இவர் உட்பட 5 பேர் ரூ. 20.84 லட்சம் கையாடல் செய்ததாக, விக்டர் வில்லயமை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் 2-வது நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கை முதல் நிலை நடுவர்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் 2-வது நீதித்துறை நடுவர் 2-ம் நிலை நடுவராக இருப்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதித்துறை நடுவர்களில் முதல் நிலை, 2-ம் நிலை கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவை நடுவர் தள்ளுபடி செய்தார். பின்னர் அமர்வு நீதிமன்றத்தில் விக்டர் மேல்முறையீடு மனு செய்தார்.
இந்த வழக்கில் விக்டர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லாத பி.பாலசுப்பிரமணியன் என்பவர் வாதிட்டார். அமர்வு நீதிமன்றத்திலும் விக்டரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிவாரணங்களை கோரி 7 குற்றவியல் மனுக்களை விக்டர் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும் விக்டர் சார்பில் பி.பாலசுப்பிரமணியன் வாதிட்டார். வழக்கறிஞர் அல்லாத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாடலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, வழக்கறிஞர் சட்டத்தில் யாருக்காகவும் யார் வேண்டுமானாலும் வாதாடலாம் எனக் கூறப்பட்டுள்ளது என பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் சட்டத்தில் வழக்கு தொடர்பவர்களுக்காக வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர் வாதாடலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாலசுப்பிரமணியன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சிறையில் இருந்தபடி நீதி மன்றத்துக்கு வந்து அவரே வாதாடியுள்ளார். அப்போது போலீஸாருடன் தகராறு செய்ததாக வழக்கு உள்ளது.
கீழமை நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார். இதனால் அவரை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த வழக்கிலும் அவ்வாறே செய்துள்ளார். இவர் தேவையில்லாமல் வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார்.
இதனால் பி.பால சுப்பிரமணியனை எந்தவொரு நீதிமன்றத்திலும் வாதாட அனுமதிக்கக்கூடாது. இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப்பணத்தை 2 வாரத்தில் உயர் நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT