Published : 06 Feb 2022 09:05 AM
Last Updated : 06 Feb 2022 09:05 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஒரு மாநகராட்சி, ஒரு பேரூராட்சி வார்டில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெறப்பட்ட 3,482 மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்ற நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. வேலூர் மாநகராட்சி 8-வது வார்டில் திமுக வேட்பாளர் சுனில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மனுத்தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. மனுக்கள் திரும்பப்பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். நாளை மாலை சின்னங்களுடன் கூடிய இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 505 மனுக்கள், குடியாத்தம் நகராட்சியில் 234, பேரணாம்பட்டில் 105, ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் 72, பள்ளிகொண்டா பேரூராட்சியில் 79, பென்னாத்தூர் பேரூராட்சியில் 89, திருவலம் பேரூராட்சியில் 63 என மொத்தம் 1,147 மனுக்கள் பெறப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகள் அளவில் அரக்கோணத்தில் 216, ஆற்காட்டில் 116, மேல்விஷாரத்தில் 137, ராணிப்பேட்டையில் 126, சோளிங்கரில் 167, வாலாஜாவில் 84 மனுக்கள் பெறப்பட்டன. பேரூராட்சிகளில் அம்மூரில் 70, கலவையில் 49, காவேரிப்பாக்கத்தில் 64, நெமிலியில் 53, பனப்பாக்கத்தில் 44, தக்கோலத்தில் 65, திமிரியில் 56, விளாப்பாக்கத்தில் 46 என மொத்தம் 1,293 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் ஆம்பூரில் 210, வாணியம்பாடியில் 292, திருப்பத்தூரில் 219, ஜோலார்பேட்டையில் 123, பேரூராட்சிகளில் ஆலங்காயத்தில் 63, உதயேந்திரத்தில் 64, நாட்றாம்பள்ளியில் 71 என மொத்தம் 1,042 மனுக்கள் பெறப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த மொத்தம் 3,482 மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியில் அலுவலகத்தில் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையை தேர்தல் பொது பார்வையாளர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்ததுடன் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம், ஆற்காடு உள்ளிட்ட நகராட்சிகளில் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிக்கப்பட்டதன் விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

போட்டியின்றி தேர்வு

விளாப்பாக்கம் பேரூராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பா ளராக விஜயா (44) என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. நேற்று மனுக்கள் பரிசீலனையில் விஜயாவின் மனு ஏற்கப்பட்டதால் அவர் போட்டி யின்றி தேர்வாகியுள்ளார்.

பெண்கள் வார்டில் ஆண்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 35-வது வார்டு பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் 8 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், நேற்று மனுக்கள்மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், பாமக சார்பில் தங்கமணி என்ற ஆண் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை கவனிக்காத அலுவலர்கள் தங்கமணியின் மனு ஏற்கப்பட்டதாக கூறிவிட்டனர். இந்த தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் வேகமாக பரவியதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஏற்கப்பட்ட தங்கமணி யின் மனுவை நிராகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த வார்டில் அமமுக சார்பில் ஏழுமலை மனுத்தாக்கல் செய்திருந்தார். பெண்களுக்கான வார்டில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

திமுக வெற்றி

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட 8-வது வார்டில் 6 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், திமுக வேட்பாளர் சுனில் குமார் மனுவை தவிர்த்து மற்ற 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திமுக வேட்பாளர் சுனில் குமார் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் திமுக தனது முதல் வெற்றிக்கணக்கை தொடங்கி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x