Published : 05 Feb 2022 03:41 PM
Last Updated : 05 Feb 2022 03:41 PM
புதுச்சேரி: "நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத செயலுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை
ஆதரவு குரல் கொடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான சிவா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மாநில அரசுகளின் அனைத்து கலாச்சாரங்களையும், ஜனநாயக உரிமைகளையும் அழிக்கும் செயலில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலங்களில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நசுக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தை மட்டும் பின்பற்றி அரசுப் பள்ளிகளில் படித்துவரும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் படிப்பதையே தங்களது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ள மாணவர்கள் விரக்தியில் தற்கொலையில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக மாணவர்களை காப்பாற்றும் நோக்கிலும், மத்திய அரசின் ஜனநாயக, ஏழை மாணவர் விரோத நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கிலும் நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் மாநில ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்று ஜனநாயக, மக்கள் விரோத கருத்துக்களையும், எண்ணங்களையும் கொண்டிருப்பவர்கள் கட்சிப் பணியாற்றலாமே தவிர, மாண்புமிக்க பதவிகளில் இருக்கக்கூடாது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, மசோதாவை திருப்பி அனுப்பும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோத செயலுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். இதை புதுச்சேரி மாநில திமுக வன்மையாக கண்டிக்கிறது.
அதிலும் தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் மத்தியில் பிறந்து வளர்ந்து அவர்களின் நிலையைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவ்வாறான மக்களின் மருத்துவபடிப்புக்கு எதிராக இருக்கும் நீட் தேர்வை ஆதரித்து கருத்து கூறுவது என்பதும் ஏற்புடையதாக இல்லை. இவர்களின் இச்செயல்கள் மக்கள் மனதில் பிளவுகளைத்தான் ஏற்படுத்தும். நாட்டின் ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT