Published : 05 Feb 2022 03:10 PM
Last Updated : 05 Feb 2022 03:10 PM

ராமானுஜரின் 'சமத்துவ சிலை' தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் "சமத்துவ சிலையானது" தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் நேரில் சந்தித்து, தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் ராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சிலை திறப்பு விழாவையோட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், "ராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்தச் சீரிய தருணத்தில், ராமானுஜர் அவர்களின் சமத்துவக் குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம், அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

தமிழகத்தின் முதல்வராகவும் திமுக தலைவராகவும் தன் வாழ்நாளெல்லாம் சமத்துவத்துக்காகப் பாடுபட்டவர் எங்கள் தலைவர் கருணாநிதி என்று சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும். ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் அவர் ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதினார். அவரது இலக்கிய திரைப் படைப்புகளில் இதுவே இறுதியானதாகும். அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் திரளிடம் ராமானுஜர் என்னும் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.

தலைவர் கருணாநிதியின் அடியொற்றித்தான் தமிழகத்தில் திமுக அரசு தற்போது நடைபெற்று வருகிறது என்பதனையும் நான் இத்தருணத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ராமானுஜர் பரப்பிய சீர்திருத்தங்கள் எங்களது நெஞ்சுக்கும் நெருக்கமானவைதாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான், அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து, தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையில் பூசை செய்வதில் சமத்துவத்தை உறுதிசெய்துள்ளது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில், மாநிலத்தில் கோயில்களின் நிர்வாகம் முறையாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவையான நிதியினை ஒதுக்கியிருப்பதோடு கோயில் பூசாரிகளின் நலன்களையும் காத்து வருகிறோம். இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில்தான் பக்தர்களும் அர்ச்சகர்களும் பயன்பெறும் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டிலேயே மிகச் சிறப்பான கோயில் நிர்வாகத்தினைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம திகழ்கிறது.

தங்களது நிகழ்வு பெரும் வெற்றியடைய எனது மனபூர்வமான வாழ்த்துகளையும் ராமானுஜரின் "சமத்துவ சிலை" என்ற இந்த அடையாளம், தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x