Published : 05 Feb 2022 02:05 PM
Last Updated : 05 Feb 2022 02:05 PM

நீட் தேர்வுக்கு நேற்றும் இன்றும் நாளையும் அதிமுக எதிர்ப்பு: ஓபிஎஸ் உறுதி

சென்னை: "அதிமுகவைப் பொறுத்தவரையில், நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவைப் பொறுத்தவரையில், நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை, அதிமுக உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்த நீட் தேர்வை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின்படி, ஓர் ஆளுநராக ஆற்ற வேண்டிய பணியை தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்

முதல்வருக்கு கடிதம்: முன்னதாக முதல்வர் நீட் விலக்கு மசோதா தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், "தங்களின் 3.2.2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, ஆளுநர் தமிழக அரசிற்கு திரும்பி அனுப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக 5.2.2022 அன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

"நீட் தேர்வு ரத்து" குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவைப் பொறுத்தவரை "நீட்" தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே "நீட் தேர்வு ரத்து" தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைகளையும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x