Published : 05 Feb 2022 11:38 AM
Last Updated : 05 Feb 2022 11:38 AM
சென்னை: கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும் கணிதப் பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள்தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும். இது அநீதியானது.
தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ம் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ம் தேதிதான் வெளியானது. தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்ததுதான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும்.
தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இடஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT