Published : 05 Feb 2022 06:39 AM
Last Updated : 05 Feb 2022 06:39 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம்தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தங்கள் கூட்டணி கட்சிகளுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அக்கட்சிகள் போட்டியிடும் வார்டுகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் 4 நாட்களில் குறிப்பிடும்படியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மந்தமாகவே நடைபெற்று வந்தது.
இறுதிகட்டத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் வியாழக்கிழமை ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அன்று ஒரேநாளில் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அன்று வரை மொத்தம் 37,518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடைசி நாளான நேற்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு மேல் ராகு காலம் பிறப்பதால், அதற்குள்ளாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய காலை 9 மணிக்கே உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்கள் முன்பு தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்பாளர்கள் குவிந்தனர்.
சென்னை மாநகரில் பேசின் பாலம், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, பகல் 12 மணிக்கு மேலும் வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை மாநகராட்சி 162-வது வார்டில் போட்டியிடும் பாஜகவேட்பாளர், திருமணம் முடிந்தகையோடு, தனது மனைவியுடன் மணக்கோலத்தல் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். மாலை5 மணியுடன் மனு தாக்கல் நிறைவடையும் நிலையில், சில மையங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, வரிசையாக வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இறுதிநாளில் ஏராளமானோர் போட்டிபோட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ததால் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் அனல் பறந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜன.28 முதல் நேற்று வரை சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், 699 வட்டார பார்வையாளர்கள் ஆகியோர் நேற்றே தங்கள் மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பணிகளைத் தொடங்கினர்.
வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வேட்புனுக்கள் மீதானபரிசீலனை அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இப்பணிகளை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல், நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். பரிசீலனையின்போது வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பாளர்கள் சமூக இடைவெளி விட்டு இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்று அனைத்துமாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர்வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற 7-ம் தேதி கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அன்றே ஒதுக்கப்பட உள்ளன. 8-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க உள்ளது. விரைவில் 1,000 பேருக்கு மிகாமல் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரச்சாரம் செய்யவும் அனுமதி அளிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT