Published : 27 Apr 2016 09:12 AM
Last Updated : 27 Apr 2016 09:12 AM
1967-லிருந்து சட்டமன்றத் தேர்தலில் ஆறு முறை போட்டியிட்டு மூன்று முறை வென்றவர் திமுக-வின் தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன்.
நாடாளுமன்றத் தேர்தல்களையும் சேர்த்து மொத்தம் பத்து தேர்தல் களங்களைக் கண்ட கணேசன், அந்தக் காலத்துத் தேர்தல் குறித்த தனது மலரும் நினைவுகளை பகிர்கிறார்.
‘‘1967-ல் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தேன். அந்தக் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. மாறாக, மக்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு நிதி தந்தார்கள்.
காலை 7 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பினால் மாலை 6 மணி வரை வீடுவீடாக ஏறி இறங்கி வாக்குக் கேட்பேன். 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரைக்கும் (அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை). ஐந்தாறு பொதுக் கூட்டங்களில் பேசுவேன்.
வாக்குச் சேகரிக்கச் செல்லும்போது என்னோடு நூறு பேராவது வருவார்கள். அதில் பத்துப் பேருக்கு மட்டும் யாராவது கட்சிக்காரர் ஒருவர் வீட்டில் மதிய சாப்பாடு சமைத்திருப்பார்கள். மற்றவர்கள் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
வாக்குக் கேட்டுப் போகும் இடங்களில் தாய்மார்கள் ஆரத்தி எடுத்து நெற்றி திலகமிட்டு 2 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை தட்டில் நிதி வைத்துக் கொடுப்பார்கள். தினமும் 250 ரூபாய்க்கு குறையாமல் வசூலாகும். கடைசி நாள் வாக்குச் சேகரிப்பின்போது, அதிகபட்சமாக மூவாயிரம் ரூபாய் நிதி தந்தார்கள். ஆனால், இப்போது பாருங்கள்.. பணம் கொடுப்பார்கள் என்பதற்காகவே ஆரத்தித் தட்டுகளை தூக்குகிறார்கள்.
முதல் தேர்தலில் தலைமைக் கழகம் எனக்கு 4,500 ரூபாய் நிதி கொடுத்தது. அத்தோடு மக்கள் அளித்த நிதி, எனது சொந்தப் பணம் எல்லாமும் சேர்த்து லட்ச ரூபாய்க்கும் கம்மியான செலவில் தேர்தலை முடித்தேன்.
ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. அன்றைக்கு பணத்துக்கு மரியாதை இல்லை; மனிதனுக்குத்தான். ஆனால் இப்போது, பணம் இல்லை என்றால் மரியாதை இல்லை. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. ஓட்டுக்கு பணம் கொடுக்காத கட்சி எதுன்னு பிரிச்சுச் சொல்ல முடியாத அளவுக்கு இப்ப தேர்தல் ரொம்பவே காஸ்ட்லி ஆகிருச்சு’’ என்று சொல்லிச் சிரித்தார் எல்.கணேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT