Published : 05 Feb 2022 11:24 AM
Last Updated : 05 Feb 2022 11:24 AM

ராமேசுவரத்திலிருந்து மன்னார் வளைகுடா தீவுகளுக்கு படகு சவாரி: சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை திட்டம்

ராமேசுவரம்

மன்னார் வளைகுடா தீவுகளை ராமேசுவரத்திலிருந்து படகில் சென்று பார்வையிடும் வகையில் சூழல் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற்றைச் சுற்றி பவளப்பாறை, டால்பின், கடல்பசு உட்பட இரண்டாயிரத்துக்கும் அதிகமான அரியவகை உயிரினங்கள் வசிக் கின்றன.

இதில் ராமேசுவரத்துக்கு வெகு அருகே உள்ள குருசடைத்தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்றுக்கு படகு மூலம் செல்லலாம். அங்கு அரியவகை பவளப் பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள், மாங் குரோவ் காடுகள் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

இதற்காக சூழல் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க வனத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. சுற்றுலாவுக்காக இரு கண்ணாடி இழைப்படகுகள், ஒரு பெரிய படகு வாங்கப்பட்டுள்ளன. பாம்பன் குந்துகால் பகுதியிலும், குருசடை தீவிலும் படகுகள் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்துகாலில் இருந்து பெரிய படகில் குருசடைத் தீவுக்குப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அங் கிருந்து மூன்று சிறிய தீவுகளுக்கு கண்ணாடி இழைப்படகில் அழைத்துச் செல்லப்படுவர்.

படகின் அடிப்பகுதி மூலம் கடலில் உள்ள பவளப் பாறைகள், மீன்கள், கடல் பாசிகளை பார்க்கலாம். நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.300.

ஏற்கெனவே, தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடுகள் மற்றும் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக்கடலில் உருவான மணல் திட்டைப் பார்வையிட சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 15 மீனவ இளை ஞர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான ஒரு வாரப் பயிற்சி முகாம், பிரப்பன் வலசையில் அண்மையில் நடைபெற்றது.

மன்னார் வளைகுடா உயிர்க் கோள தேசிய பூங்காவில் இயக்கப்பட்டு வரும் சூழல் சுற்றுலா தலங்களான காரங்காடு சூழல் சுற்றுலா, பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா மற்றும் புதிதாக மன்னார் வளைகுடா தீவுகளுக்கு தொடங்க உள்ள சூழல் சுற்றுலா தலங்களில் இந்த 15 இளைஞர்களுக்கும் உயிர் காக்கும் நீச்சல் வீரர் பணி வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x