Published : 04 Feb 2022 07:08 PM
Last Updated : 04 Feb 2022 07:08 PM
சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை, கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனையை தடுப்பதாகவும், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊட்டி வரும் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய குன்னூர் மற்றும் கோத்தகிரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்ய சோதனை சாவடிகளில் முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தியுள்ளதாகவும், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில நெடுஞ்சாலையில் 32 குடிநீர் சுத்திகரிப்பு மையங்களும், தேசிய நெடுஞ்சாலையில் 14 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஊட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரும், குளிர்பானங்களும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு மற்றும் பழனியில் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.அதேபோல கொடைக்கானலில் குடிநீர் மையங்கள், ஏடிஎம்கள் முறையாக இயங்குகின்றனவா என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர். பிளாஸ்டிக் தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர். இதேபோல கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாககல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT