Published : 04 Feb 2022 06:33 PM
Last Updated : 04 Feb 2022 06:33 PM

டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன?

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்றும், கடந்த டிசம்பர் 14- தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தமிழக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை குத்தகை விடுவது தொடர்பாக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகநாதன் என்பவர் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'கரோனா ஊரடங்கு காலத்தில் 16 மாதங்களாக பார்கள் திறக்கப்படவில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பார் கட்டிட உரிமையாளருக்கு வாடகை பாக்கி உள்ளது. எனவே, 2019-ம் ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரோனா ஊரடங்கினால் தங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே வழங்கப்பட்ட குத்தகையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுக்க முடியாது. ஏனென்றால், டெண்டர் ஒப்பந்தத்தில் பார் மூடப்பட்டாலோ, வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டாலோ புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும். இதற்காக தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பார் உரிமையாளர் கோர முடியாது என்று நிபந்தனை உள்ளது. மேலும், மதுபானம் தொடர்பாக அரசு ஏதேனும் கொள்கை முடிவு எடுத்து, மதுபான பார்களை மூடினால் ஒப்பந்ததாரர்கள் இழப்பீடு எதுவும் கோர முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மேலும், தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கின்ற வருவாய் பிரதான வருமானமாக உள்ளது. மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு காலத்தில் கூறப்பட்டாலும் தற்போது மது அருந்துவது என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது. மேலும், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்படி மனுதாரர்கள் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழிவகை உள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பார்களை திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை.அதாவது, இதுபோன்ற பார்களை ஏலம் விட்டு, பார்களை திறந்து பொது இடத்தில் மக்களை மது அருந்த அனுமதிப்பதற்கு அதிகாரம் இல்லை.

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்பிரிவு 4 -ஏ வின் படி தனியார் இடத்தில் அதாவது ஒருவர் தனது வீட்டில் வைத்து மது அருந்தலாம். பொது இடத்தில் அருந்தக்கூடாது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த விதிக்கு புறம்பாக பார்கள் நடத்தப்படுகின்றன. பொது இடத்தில் சட்டப்படி யாரும் மது அருந்தக்கூடாது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனையில் ஏகபோக உரிமையாளராக திகழ்கிறது. அதற்காக பொது இடத்தில் பொதுமக்கள் மது அருந்துவதற்கு பார் நடத்த அனுமதி இல்லை. ஆனால் தமிழகத்தில் புற்றீசல் போல் பார்கள் திறக்க தமிழ்நாடு மது சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதி 2003-இன் வழிவகை செய்கிறது. ஆனால் இந்த விதியே, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்திற்கு எதிராக உள்ளது. அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக சட்ட விதிகளுக்கு எதிராக பொது இடத்தில் பொது மக்களை மது அருந்த வைப்பதை நியாயப்படுத்த முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.

எனவே, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 14- தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட குத்தகையை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x