Published : 04 Feb 2022 05:31 PM
Last Updated : 04 Feb 2022 05:31 PM
சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பெரும்பாலானோர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரிழித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடியானவர்களின் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன. மதுவால் இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பல குற்றச் சம்பவங்களுக்கு மதுதான் காரணமாக அமைகின்றன. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பணத் தேவைக்காக, செயின் பறிப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தையே வீணடித்துக் கொள்கின்றனர்.
மதுக்கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், பள்ளிச் சீருடை அணிந்து மதுக்கடைகளில் மது பாட்டில்களை வாங்கும் மாணவர்களின் புகைப்படங்கள், போதையில் கலாட்டாவில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதோடு, சாலை விபத்துகள் அதிகரிப்புக்கும் மதுதான் மூலகாரணமாக உள்ளது.
இவ்வாறு தமிழகமே மதுவால் சீரழிந்து வரும் நிலையில், டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் அறிவிப்பாக இல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து பார்கள் மூடும் வரை உயர் நீதிமன்றம் உறுதியாக இருக்க வேண்டும். டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட்டது போல் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT