Published : 04 Feb 2022 04:41 PM
Last Updated : 04 Feb 2022 04:41 PM
திருச்சி: திருச்சி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்ற விவரம் வெளிப்படையாக அறிவிக்காமல், கடைசி வரை ரகசியம் காத்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 1, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 29, 31, 32, 33, 34, 36, 37, 38, 40, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 60, 61, 63, 64 ஆகிய 51 வார்டுகளில் திமுகவும், 30, 62 ஆகிய வார்டுகளில் மதிமுகவும், 35, 47 ஆகிய வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 23, 65 ஆகிய வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 17, 59 ஆகிய வார்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், 28-வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன.
30, 47 ஆகிய 2 வார்டுகளை கேட்டதற்கு ஒரு வார்டு மட்டுமே ஒதுக்கப்பட்டதால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர், நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையே, முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 5 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதால், காங்கிரஸார் சிலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிக வார்டுகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும், கட்சியில் பல ஆண்டு காலம் உழைத்து வரும் தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கட்சியின் சேவா தள மாநில பெண் நிர்வாகி ஒருவர், கட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மற்றொரு நாள் கட்சி நிர்வாகிகள் இருவர், கட்சியின் மாவட்ட அலுவலகத்தை பூட்டுப் போட்டு பூட்டினர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், வேட்பாளர்கள் குறித்து கடைசி வரை கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் கடும் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று திருச்சி மாநகராட்சி 2-வது வார்டில் ஜவஹர், 24வது வார்டில் சோபியா விமலராணி, 31வது வார்டில் சுஜாதா, 39வது வார்டில் ரெக்ஸ், 41வது வார்டில் கோவிந்தராஜன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இது குறித்து வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டபோது, "வேட்புமனு தாக்கல் செய்யுமாறு 5 பேருக்கும் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைமை அறிவுறுத்தியதால், இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்" என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT