Published : 04 Feb 2022 02:55 PM
Last Updated : 04 Feb 2022 02:55 PM

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்?- அண்ணாமலை விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பியதை, பிப்.3-ம் தேதி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின் மூலம் நாம் அறிந்துகொண்டோம்.

தமிழகத்தில் நேற்றிலிருந்து புரிதல் இல்லாத ஆளுங்கட்சி, ஒரு பிம்பத்தை கட்டமைத்து பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு, பிப்ரவரி 2017-ல் தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை ஆளுநர் பிப்.2, 2017 அன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதனைத்தொடர்ந்து மார்ச் மாதம் மத்திய அரசு தமிழக அரசிடம் இதுதொடர்பாக சில சந்தேகங்களை கேட்டது.

இந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு ஏப்ரல் 2017-ல் பதிலளித்தது. மே 2017-ல் மத்திய அரசின் சந்தேகங்கள் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் அப்போதைய தமிழக அரசு அளித்தது.

இதனையடுத்து செப்.2017-ல், குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசின் பதில் மற்றும் நீட் விலக்கு மசோதா அனைத்தையும் மத்திய அரசு அனுப்பியது. செப்.18, 2017-ல் குடியரசுத் தலைவர், இந்த மசோதாவை ரத்து செய்து, செப்.22, 2017-ல் தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்டதாக அப்போதைய மாநில அரசு அக்.25, 2017-ல் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.

இந்தத் தகவல்கள் அனைத்து உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவின் மூலம் தெரிந்துகொண்டோம்.

இப்படி ஏற்கெனவே நீட் விலக்கு கோரிய மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு சென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்பு, 2022-ல் தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதனை சட்டப்பேரவை தலைவருக்கு மீண்டும் அனுப்பியுள்ளார்.

என்ன காரணத்துக்காக இந்த மசோதா திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு அதை இன்னும்கூட வெளியிடவில்லை.

ஆளுநர் மிக முக்கியமாக கூறியிருப்பது, உச்ச நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டில் சி.எம்.சி வேலூர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு தொடர்பாக 3,4 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரானதா, இந்தத் தேர்வின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்களா என்பது உள்ளிட்ட வாதங்களை மறுத்து உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு யாருக்கும் எதிரானாது கிடையாது என்ற உத்தரவை பிறப்பித்தது.

அதுமட்டுமல்ல, கடந்த 2010 டிச.21, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுக எம்பியாகவும் அமைச்சராகவும் இருந்த காந்திசெல்வன் நீட் தேர்வு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நீட் என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரானதுதான். அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிரானது. இதனை அப்போது திமுகவின் அமைச்சரும் எம்பியுமாக இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த காந்திசெல்வன் தாக்கல் செய்தார். எனவே மாநில அரசு, நீட் விலக்கு மசோதாவை நிராகரித்ததற்கான ஆளுநரின் பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆளுநரின் எழுப்பியிருந்த கேள்விகள், அந்த கேள்விக்கு அரசு அளித்த பதிலை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ஏற்புடையது அல்ல" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x