Published : 04 Feb 2022 01:01 PM
Last Updated : 04 Feb 2022 01:01 PM
சென்னை: மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் காலத்தில் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதித்திட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல் நடைமுறை, அமலில் இருக்கும் காலத்தில் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகயே இன்றளவும் இருக்கின்றது.
வணிக சுதந்திரம் என்பது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது. தேர்தல் நடைமுறை என்பது தற்காலிகமானது. நிரந்தர சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வணிகம் நடைபெறுகின்றது. அதை கருத்தில் கொள்ளாமல், தேர்தல் அதிகாரிகள் அவர்களின் ஆளுமைக்குள், தேர்தல் நடைமுறை காலத்தை கொண்டுவருகின்ற போது, ஏற்கனவே எடுக்கின்ற சட்ட நடைமுறைகளுக்கு முரணாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருகின்ற போது, சட்டத்தை மீறும் அரசியல் வாதிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வணிகத்தையும், வணிகர்களையும், பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கின்றது என்ற நிலையை பேரமைப்பு மிகுந்த அழுத்தத்துடன் தெரிவிக்கின்றது.
வணிகர்கள் வங்கி ஆவணங்களையும், அடையாள அட்டைகளையும் எடுத்துச் சென்றால் கூட, குறிப்பாக வாணியம்பாடியில் தேர்தல் அதிகாரிகள் வணிகர்களை மடக்கிப்பிடித்து அவர்கள் கொள்முதலுக்காக எடுத்துச்செல்லுகின்ற தொகையை பறிமுதல் செய்கின்றனர். சாதாரண நடுத்தர வணிகர்களான காய்கறி வணிகர்கள், கால்நடையாக விற்கின்ற விவசாய வணிகர்கள் கூட, தாங்கள் விற்ற பொருள் எந்த ரசீதுக்கோ, வரிகளுக்கோ உட்படாதது என்பதனால் அதை எடுத்துச்செல்வதற்கான உரிமையை இழப்பதோடு, தங்களின் மூலதனத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகின்றது.
அதைப்போலவே பொதுமக்கள் தங்களின் பழைய நகைகளை விற்று சுய தேவை, கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அவசர, அத்தியாவசியச் செலவினங்களுக்குக்கூட பழைய நகைகளை எடுத்துச் சென்று விற்று, தேவையான பொருட்களை வாங்குவதற்கான நிலை மறுக்கப்படுகிறது.
உதாரணமாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராமல், வணிகர்கள் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை விற்று வரவு செய்துகொள்ள சட்டத்தில் இடம் இருக்கின்றது. இன்றைய பொருளாதாரச் சூழலில் குறைந்தது வணிக கொள்முதலுக்கு செல்பவர்கள் குறைந்தது ரொக்கம் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் உடனடியாக அனுமதி அளித்து, வணிக உரிமைகளை காத்திட தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற சூழலில், தேர்தல் ஆணையங்களின் கெடுபிடிகள் மீண்டும் வணிகர்களை கரோனா காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பேரமைப்பு பதிவு செய்கின்றது.
எனவே, மதிப்பிற்குரிய மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் பேரமைப்பு அளித்துள்ள கோரிக்கையினை உடனடியாக பரிசீலித்து, அதிகார அத்துமீறல்களை தவிர்த்திடுமாறும், வணிகர்களும், பொதுமக்களும் இயல்பான நிலையை கையாளுகின்ற வழிமுறைகளை அமல்படுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திடுமாறும், வணிகர்கள் குறைந்தது ரூபாய் 2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதி அளித்திடுமாறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்."
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT