Published : 14 Apr 2016 10:28 AM
Last Updated : 14 Apr 2016 10:28 AM

இந்திய முறை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?- விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை

உலக சித்தர்கள் தினமான இன்று (ஏப்ரல் 14) இந்திய முறை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

சித்த மருத்துவத்தைத் தந்த சித்தர்களை நினைவுகூரும் நாளாக ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் உலக சித்தர்கள் தினமாக 2009-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்க விளைவு இல்லாமல்

மனிதர்களைச் சுற்றி பல ஆயிரக்கணக்கான மூலிகைகள், ஜீவராசிகள், உலோகங்கள், உப்புகள், உபரச பாடாணங்கள் பொதிந்துள்ளன. இவைகளின் மருத்துவ குணங்களை அடையாளம் கண்டு நன்மை எது, நஞ்சு எது என பகுத்தறிந்து, நாடி பார்த்து நோய்களைக் கணித்து, பக்க விளைவுகளைத் தவிர்த்து நோய்களைத் தீர்க்க பல மருந்துகளை சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளில் பல்வேறு பக்க விளைவுகள் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறோம். ஆனால், பக்க விளைவுகள் பெரிதும் இல்லாத, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவையே மருந்தாகப் பயன்படுத்தி, நோய்களைத் தீர்ப்பதுதான் சித்த மருத்துவம்.

குணப்படுத்துவதில் தீவிரம்

எந்த நோயாக இருந்தாலும், நோய்க்கு அடிப்படைக் காரணமான உணவுப் பாதை முழுவதையும் சுத்தம் செய்ய வயிற்றுக்கு பேதிக்கு கொடுத்த பின், மூலிகைகளால் ஆன மருந்தையும், கட்டுப்படவில்லையெனில் உப்புகள், உபரசங்களால் ஆன பற்பங்களையும் வழங்கி, இதிலும் நோய் கட்டுப்படவில்லையெனில் உலோகங்களால் ஆன செந்தூரங்களையும் வழங்கி சித்தர்கள் நோயை வேரோடு சாய்த்தனர் என்றால் அது மிகையல்ல.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அலுவலர் (சித்தா) எஸ்.காமராஜ் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அக நஞ்சான கொட்டைகளை நீக்கி, புற நஞ்சான மேல் தோலை நீக்கி சுத்தி என்ற முறையில் மூலிகைகளின் நச்சுத் தன்மையை நீக்கி, முறைப்படி மருந்து செய்து, கால அளவுப்படி தக்க அனுபானங்களுடன் நோயாளிகளுக்கு வழங்கி நோயை முற்றிலுமாக சித்தர்கள் குணப்படுத்தினர்.

முழுப் பலனைப் பெறலாம்

சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை. காணாமல் போன கட்டு, களங்கு மருந்துகளைப் பயன்படுத்தினால் எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்க முடியும் என சித்தர்கள் கூறியுள்ளனர். சாதாரண சளி, இருமல், காய்ச்சல், நீரிழிவு, இதய நோய், மூட்டு வலிகள், புற்றுநோய் என அனைத்துக்கும் மருந்துகளை வகுத்துத் தந்துள்ளனர். இவற்றை முறையாகத் தெரிந்து, சரியாகப் பயன்படுத்தினால் அதன் முழுப் பலனைப் பெறலாம்.

மருந்துகள் மட்டுமன்றி பத்திய முறைகள், யோகம், வர்மம், கொக்கணம் போன்றவைகளும் சித்தர்கள் வகுத்த நோய் தீர்க்கும் வழிகளாகும். கலப்படமில்லாத உணவு, கள்ளமில்லா மனது, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் நாமும் சித்தர்கள் போன்று மரணத்தை வெல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை என்றாலும், பெரும்பாலானோர் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நாடுகின்றனர். ஆங்கில மருத்துவத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்காததும் ஒரு காரணம்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவைத் தொடங்குவதும், சித்த மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பி, தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதுடன், சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

தேர்தல் அறிக்கையில்…

தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்து, அதை நிறைவேற்றினால், நாட்டில் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் இந்திய முறை மருத்துவத்தால் பயனடைந்தோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x