Published : 04 Feb 2022 07:18 AM
Last Updated : 04 Feb 2022 07:18 AM

‘ஹில்குரோவ்’ ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை கடந்து வனத்துக்குள் செல்ல சிரமப்பட்ட யானைகள்: வனத்துறை எச்சரித்ததால் சுவரை இடிக்கும் பணி தீவிரம்

கல்லாறு வனப்பகுதியில் உள்ள ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை கடக்க முடியாமல் திணறும் யானைகள்.

குன்னூர்: நீலகிரி மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லதடை ஏற்பட்டது. வனத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சுவரின் ஒரு பகுதியை நேற்று ரயில்வே நிர்வாகம் இடித்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில்பாதையில் ஹில்குரோவ் - ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் சில யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், ஹில்குரோவ் ரயில் நிலையத்துக்கு வந்த அந்த யானைகளின் நடமாட்டத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.

அந்த வீடியோவில், முதலில்ஒரு பெண் யானை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளம் அருகேவருகிறது. தண்டவாளத்தின் மறுபுறத்தில் வனப்பகுதிக்கு செல்லமுடியாதபடி நீளமானதடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தால், அந்தப் பாதையை கடந்து செல்ல முடியாமல் சில விநாடிகள் அங்கேயே அந்த யானை நிற்கிறது.

அதைத் தொடர்ந்து குட்டியானைகள் உட்பட 7 யானைகள் வருகின்றன. எப்படியாவது மறுபுறத்துக்கு செல்ல வேண்டும்என்பதால், அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து தண்டவாளத்திலேயே சில மீட்டர் தூரம் பயணித்து தடுப்புச்சுவரின் இறுதிவரை செல்கின்றன. அங்கிருந்த ஒரு பள்ளம்வழியாக இறங்கும்போது குட்டியானைகள் நிலைதடுமாறி விழுகின்றன. இதனைக் கண்ட பெண் யானை பிளிறல் சத்தம் எழுப்புவது காண்போரை கண் கலங்கச் செய்கிறது.

இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. தண்டவாளத்தின் அருகில் உள்ள தடுப்புச் சுவரால் யானைகள் நடமாட்டம் தடைபட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

தடுப்புச் சுவரை இடிக்கும் பணியில்
ஈடுபட்ட ரயில்வே ஊழியர்.

இந்நிலையில், இந்த வீடியோவை ட்விட்டரில் டேக் செய்திருந்த தமிழக வனத்துறைச் செயலர் சுப்ரியா சாஹூ, “ஆபத்தான ரயில் பாதையைக் கடந்து செல்லயானைக் கூட்டம் திணறுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. வன உயிர்களுக்கு தீங்குஇழைக்காத வகையில் கட்டுமான பணிகளை செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாய தேவையாக உள்ளன” என்று தெரிவித்து மத்திய ரயில்வே அமைச்சகத்தை அதில் டேக் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று மதியம் அந்த தடுப்பு சுவரை இடிக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டது. அந்த வீடியோவை இணைத்து சுப்ரியா சாஹூ தனது ட்விட்டர் பதிவில்,“ஒருங்கிணைந்து நாம் பணியாற்றும்போது அதற்கான தீர்வுகளை நாம் பெறுகிறோம். தடுப்புப்சுவர் இடித்து அகற்றப்படுகிறது. தமிழக வனத்துறை, ரயில்வே அமைச்சகத்துக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, "தடுப்புச் சுவர் கட்டப்பட்ட பகுதி, ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமானது. யானைகள் ரயில் பாதையை கடந்து சிங்காராஎஸ்டேட் பகுதிக்கு செல்லும். எனவே, அவை கடந்து செல்ல இடம்விட வேண்டும் என ரயில்வேநிர்வாகத்திடம் தெரிவித்திருந்தோம்” என்றார்.

ரயில்வே ஊழியர்கள் கூறும்போது, “வடகிழக்கு பருவமழை காலத்தில், நீலகிரி மலை ரயில் பாதையில் கல்லாறு - ஹில்குரோவ் இடையே அடிக்கடி பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுவதுடன், நிலச்சரிவும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அப்பகுதியில், தற்போது 30 மீட்டர் அளவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. அந்த தடுப்புச் சுவரில் இடைவெளி விட வனத்துறை அறிவுறுத்தியதால், சுவரின் ஒரு பகுதியை இடித்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x