Published : 03 Feb 2022 05:39 PM
Last Updated : 03 Feb 2022 05:39 PM
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும், திருப்பி அனுப்பியதற்கான காரணங்களையும் தமிழக அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.
தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தனர். எனினும், மசோதா தொடர்பாக எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியாகவில்லை. இன்று ஆளுநர் மாளிகை தரப்பில் நீட் மசோதா தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண்.43/2021-யையும், இந்த சட்ட முன்வடிவுக்கு அடிப்படையாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையையும் விரிவாக ஆய்வு செய்த பின்னரும், மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வுக்கு முந்தைய சமூகநீதி நிலையைக் குறிப்பாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நிலையை ஆய்வு செய்த பின்னரும், இந்த சட்ட முன்வடிவு, இம்மாநிலத்திலுள்ள மாணவர்களின் குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் கருதுகிறார்.
எனவே, இச்சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரின் விரிவான விளக்கங்களுடன் அவையின் மறுபரிசீலனைக்காக 01.02.2022 அன்று தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
கிறித்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர் அமைப்பு எதிர் இந்திய அரசு (2020) வழக்கில், இப்பொருண்மையை குறிப்பாக சமூக நீதி நோக்கத்திலிருந்து விரிவாக ஆராய்ந்து ஏழை, எளிய மாணவர்கள் மீதான பொருளாதார சுரண்டலைத் தடுக்கக்கூடியதென்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும், நீட் தேர்வின் தேவையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT