Published : 03 Feb 2022 02:31 PM
Last Updated : 03 Feb 2022 02:31 PM

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு | உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை கேவியட் மனு தாக்கல்

பிரதிநிதித்துவப் படம்

அரியலூர்: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல் நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி, அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறியதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, மாணவி மரணம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், மதம் சார்பான பிரச்சாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை என்றும், மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், கடந்த மாதம் 31-ம் தேதி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

தற்போது, மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மகள் மரணம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இதனிடையே, மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை கிளை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பள்ளி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x