Published : 03 Feb 2022 01:40 PM
Last Updated : 03 Feb 2022 01:40 PM
சென்னை: ‘CM SIR HELP ME’ என்ற பதாகையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் என்.சதிஷ், நீட் தேர்வுக்கு எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருவதற்காக அவருக்கு நன்றி சொல்லி, தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "இந்தியா போன்ற ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை நிலவும் நாட்டில் நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தடையாக விளங்குகிறது. அதனால்தான், தமிழகத்தில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றதோடு, உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. அப்படிப் பெற்ற கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்தியப் பிரதமரை 17.6.2021 அன்று முதல்வர் நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவு 13.9.2021 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அச்சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மாணவர்களின் நலனைக் காத்திட தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று (3.2.2022) தலைமைச் செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் என்.சதிஷ், ‘CM SIR HELP ME’ என்ற பதாகையுடன் சந்தித்து, முதல்வர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார். மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் பேராதரவு ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாணவரிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, அம்மாணவருக்கு நன்றி தெரிவித்து, அகில இந்திய அளவிலும் இதற்காக குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அம்மாணவரும், முதல்வருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்".
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT