Published : 03 Feb 2022 01:10 PM
Last Updated : 03 Feb 2022 01:10 PM

தமிழகம் முழுவதுமான கோயில் நில ஆக்கிரமிப்பு விவரத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கோயில் செயல் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, நடவடிக்கைகள் எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோயில் நிர்வாகம் தான் எனவும், கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோத்து செயல்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடமையைச் செய்வதற்குதான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருப்பதற்காக அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

கோயில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிபாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், கடந்த 2014-ம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x