Published : 07 Apr 2016 02:09 PM
Last Updated : 07 Apr 2016 02:09 PM
பீர்மேடு தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி என அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், இடுக்கி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளருமான சி. அப்துல்காதர் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.
‘தி இந்து’வுக்காக அவர் தொலை பேசியில் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
இடதுசாரிகள் கோட்டை என்று அழைக்கப்படும் பீர்மேடு தொகுதியில் போட்டியிடுகிறீர்களே?
கேரள மாநிலத்தில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக தமிழக, கேரள இரு மாநில மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பது பெரியாறு அணை அமைந்துள்ள பீர்மேடு தொகுதியைத் தான். இந்த தொகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இத் தொகுதியில் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதில் இருந்தே அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதை அறியலாம்.
முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் குரல் எழுப்புவீர்களா?
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தமிழக தென்மாவட்ட விவசாயிகளின் கஷ்ட, நஷ்டத்தை உணர்கிறேன். இது நீண்ட காலமாக இரு மாநிலப் பிரச்சினையாக உள்ளது. இதனை சட்டப்படி அதிமுக சந்தித்து வருகிறது. கேரளத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று கேரள சட்டசபையில் குரல் கொடுத்து இந்த பிரச்சினையைத் தீர்க்கப் போராடுவோம்.
தோட்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?
தமிழகத்தில் அதிமுக அரசு வழங்கி வந்த விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். தங்களது வாழ்வாதார முன்னேற்றத்தில் அதிமுக பாடுபடும். என்று தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்க நிச்சயம் பாடுபடுவேன்.
கேரளத்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த முறை வெற்றி வாய்ப்பு குறித்து?
கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இந்த முறை வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நேற்றுமுன் தினம் பீர்மேடு தொகுதியில் வேட்பாளர் அறிவி த்தவுடனே அன்று மாலை காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விலகி 1200 பேர் அதிமுகவில் இணை ந்துள்ளனர். இன்னும் பலர் சேர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் முல்லை பெரியாறு அணை பிரச்சினையைத் தீர்க்க பீர்மேடு தொகுதியில் இப்போதே அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT