Last Updated : 03 Feb, 2022 09:59 AM

 

Published : 03 Feb 2022 09:59 AM
Last Updated : 03 Feb 2022 09:59 AM

கோவையில் மகுடம் சூடப்போகும் முதல் பெண் மேயர் யார்? - தேர்தல் களத்தில் வலுக்கும் எதிர்பார்ப்பு

கோவை

கோவை மாநகராட்சியின் 6-வது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் மகுடம் சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் மொத்தம் 811 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

நகராட்சியாக இருந்த கோவை, 1981-ம் ஆண்டில் 72 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதுவரை கோவையின் மேயர் பதவிகளை அதிமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.

1996-ம் ஆண்டு தமாகாவை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் முதல் மேயராக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். 2001-ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த தா.மலரவனும், 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காலனி ஆர்.வெங்கடாசலமும் மறைமுகமாக கவுன்சிலர்களால் மேயராக தேர்வு செய்யப்பட்டனர்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த செ.ம.வேலுச்சாமி நேரடி தேர்தல் மூலமாக மேயரானார். 2014-ம் ஆண்டில் அவரது பதவி பறிக்கப்பட்டதால், அடுத்து நடந்த நேரடி தேர்தல் மூலம் கணபதி பி.ராஜ்குமார் மேயரானார்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், தனி அதிகாரியின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைபெறும் தேர்தலில் நேரடி மேயர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலர்கள் மூலமாகவே மேயர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

கோவை மேயர் பதவியை இதுவரை கூட்டணி கட்சிக்கே திமுக வழங்கியுள்ளது. அதிமுகவோ நேரடியாக மூன்று முறை மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இத்தகைய சூழலில், தற்போது கோவை மேயர் பதவிக்காக திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றன. பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளும் இம்முறை களத்தில் உள்ளன. இருப்பினும் திமுக, அதிமுக இடையேதான் போட்டி உள்ளது.

மேயர் வேட்பாளர்

கோவை மேயர் பதவி தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆண் வேட்பாளர்களை மனதில் கொண்டே இவ்விரு கட்சிகளும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தன. பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யாரை வேட்பாளராக முன்னிலைப்படுத்துவது என்ற குழப்பம் தொடக்கம் முதலே திமுக, அதிமுக தவிர பிற கட்சிகளுக்குள்ளும் இருந்து வருகிறது.

வேட்புமனு தாக்கல் நிறைவு பெற இன்னும் ஒரு நாளே உள்ளது. அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கவுள்ளது. இருப்பினும் இதுவரை திமுக தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ தங்களுக்கான மேயர் வேட்பாளரை கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதில் குழப்பம் நீடித்து வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக தரப்பில் மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், முன்னாள் துணை மேயர் நா.கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஷர்மிளா சந்திரசேகரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மாநகராட்சி 38-வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவை பொறுத்தவரை மாவட்ட பொறுப்பாளராக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வகுக்கும் வியூகங்களை அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். அதிமுகவின் வெற்றிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வியூகங்களை வகுத்து வருகிறார்.

பெரும்பான்மை வார்டுகளில் வெற்றிபெறும் கட்சிக்கே மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதிக இடங்களை கைப்பற்ற திமுக, அதிமுகவினர் முனைப்புடன் பணியாற்றிவருகின்றனர்.

முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது. வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது தொடர்பான கருத்துகள், எதிர்பார்ப்புகள் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x