Published : 28 Jun 2014 09:22 AM
Last Updated : 28 Jun 2014 09:22 AM
சென்னை ராயபுரத்தில், அரசு நடத்தும் ஆதிதிராவிடர் மகளிர் விடுதியில், குளியலறை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக மாணவிகள் வளாகத்துக்குள்ளே பொது வெளியில் குளித்து வருகின்றனர்.
சென்னை ராயபுரம் கல்லறைச் சாலையில் ஒரே கட்டிடத்தில், தமிழக அரசின் 8 ஆதிதிராவிடர் மகளிர் விடுதிகள் உள்ளன. 3 தளங்களைக் கொண்ட இந்த விடுதியில் 30 அறைகள் உள்ளன. பள்ளி மாணவிகள் முதல் முனைவர் பட்டம் படிப்பவர்கள் வரை கிட்டத்தட்ட 600 பேர் தங்கக் கூடிய இந்த விடுதியில், 30 குளியலறைகள் உள்ளன. ஆனால் அவற்றில் 4 குளியலறைகள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன. எனவே, மாணவிகள் விடுதி வளாகத்தினுள்ளேயே, தரை தளத்தில், பொது வெளியில் குளித்து வருகின்றனர்.
அந்த விடுதியில் தங்கும் மாணவி கூறுகையில், “பயன் படும் நிலையில் உள்ள குளியல றையில் அனைவரும் குளித்து விட்டு கல்லூரிக்கு கிளம்புவதற்கு பல மணி நேரம் ஆகும். மேலும், குளியலறை குழாயில் வரும் நீர் அழுக்காக இருப்ப தால், தரை தளத்தில் தொட்டி களில் நிரப்பப்படும் மெட்ரோ வாட்டரைத்தான் குளிப்பதற்கும், குடிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதை ஒவ்வொரு முறையும் தூக்கி வருவதற்கு சிரமமாக இருப்ப தால், கீழேயே குளிக்கி றோம். யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அதிகாலையிலேயே குளித்துவிடுவோம். இப்போது ஷெட் ஒன்று போடப்பட்டுள்ளது. எனினும், பயமாகத்தான் உள்ளது” என்றார்.
ஒரு அறையில் 30 மாணவிகள் தங்க வைக்கப்படுவதாக கூறப்படு கிறது. மாணவிக ளுக்காக புதிதாக வாங்கப்பட்டிருக்கும் கட்டில் களை பயன்பாட்டிற்கு வழங்கா மல் பல மாதங்களாக ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
படித்து முடித்து இந்த ஆண்டு வெளியில் வந்த மாணவி ஒருவர் கூறுகையில், “மாலை 7 மணிக்கு மேல் அங்கு வார்டன் யாரும் இருந்ததில்லை. அரசு விதிகள் படி உணவுப் பட்டியல் கடைபிடிக்கப்படுவதில்லை. சாதம், சாம்பார் மட்டுமே கொடுக் கப்படுகிறது.
இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினால் முதுநிலை படிக்கும்போது, இடம் தர மாட்டார்கள் என்ற பயத்தில் மாணவிகள் அமைதியாக இருக் கின்றனர்” என்றார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1,294 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 1,059 விடுதிக ளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.76.33 கோடி நிதியை கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால், இப்போதும் இந்த விடுதிகள் பராமரிப்பு செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளன.
பொள்ளாச்சி விடுதியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டதை அடுத்து, விடுதிகளுக்கான விதிமுறை களை தமிழக அரசு வகுத்துள் ளது. அந்த விதி முறைகள் ஆதிதிராவிடர் நல விடுதிகளிலும் பின்பற்றப்படுமா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் மொத்தம் 21 ஆதிதிராவிடர் நல விடுதிகள் உள்ளன. அவற்றில் 9 பெண்கள் விடுதிகள் அடங்கும். இந்த விடுதிகள் பராமரிப்புக்காக இந்த ஆண்டு மொத்தம் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் விடுதியில் குளியலறை உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ரூ.3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சைதாப்பேட்டை மசூதி தெருவில் புதிய விடுதி கட்டப்பட்டுள்ளது. அங்கு சில மாணவிகளை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT