Published : 03 Feb 2022 09:50 AM
Last Updated : 03 Feb 2022 09:50 AM
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும்கலை, அறிவியல் கல்லூரி ஒன்றில் குறைந்த ஆன்லைன் வகுப்பு பங்கேற்பு, வருகைப் பதிவைக் காரணம் காட்டி இறுதியாண்டு உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஆன்லைன் தேர்வெழுத அனுமதி மறுப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, நடுத்தர மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளை எதிர் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இது போன்ற சூழலில் வருகைப் பதிவைக் காரணம் காட்டி, செமஸ்டர் தேர்வெழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்குப் பதிலாக அடுத்த செமஸ்டரில் எழுதலாம் என அறிவுறுத்துகின்றனர். வருகைப் பதிவு இழப்புக்கான அபராத கட்டணத்தை வசூலித்துவிட்டு தேர்வெழுத அனுமதிக்கலாம் என்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் கூறியதாவது:
கடந்த முறை கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்களுக்கு வருகைப் பதிவெல்லாம் பார்க்க வேண்டாம் என, அரசு அறிவுறுத்தியது. தொற்று குறைந்தபோதிலும் ஆன்லைன் தேர்வை மாணவர்கள் வலியுறுத்திய நிலையில், அவர்கள் எதிர்காலம் கருதி நேரடி தேர்வுக்கு அரசு நடவடிக்கை எடுத்தது. படிக்கக் கூடுதல் அவகாசம் கொடுத்தது.
ஏற்கெனவே 90 நாளில் 69 நாள் வந்தாலே தேர்வெழுத அனுமதிக்கலாம். தற்போது, வேலை நாட்களை 116 நாளாக்கி, இதில் 69 நாள் வகுப்பறை வருவது அவசியம் என்பதால், இதையும் சில மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். 65 நாள் இருந்தால் ரூ.360 கட்டணம் செலுத்தி தேர்வெழுதலாம். 50 நாட்களுக்கு கீழ் இருந்தால் விதிமுறைபடி தேர்வெழுத முடியாது. இப்பிரச்சினை பெரும்பாலும் சுயநிதி பிரிவு மாணவர்களுக்கே அதிகம் இருப்பது தெரிகிறது என்று கூறினர்.
காமராசர் பல்கலை. பதிவாளர் வசந்தாவிடம் கேட்டபோது, பொதுவாக வருகைப் பதிவு, ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்பு 80-85 சதவீதம் இருக்க வேண்டும். ஊரடங்கு காலமாக இருப்பதால் குறைந்தபட்சம் 65 சதவீதம் இருந்தாலும் மருத்துவச் சான்றிதழ் வழங்கி தேர்வெழுத அனுமதிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் பேசி பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வெழுத முயற்சி செய்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT