Published : 02 Feb 2022 06:23 PM
Last Updated : 02 Feb 2022 06:23 PM

உழைப்போரை உறிஞ்சும் பெருமுதலாளிகளை பாதுகாக்கிறது மத்திய பட்ஜெட்: திருமாவளவன்

கோப்புப் படம்

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வழக்கம்போல கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதாகவும், நடுத்தர, ஏழை, எளிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவதாகவும் இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வழக்கம் போல கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதாகவும் நடுத்தர, ஏழை, எளிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்துவதாகவும் இருக்கிறது. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பட்ஜெட்டில் வைரத்துக்கான வரியை 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைத்திருக்கிறார்கள். அதுபோலவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரியை 12 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை.

இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கரோனா காலத்தில் மேலும் சுமார் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த பட்ஜெட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கோ எந்த ஓர் அறிவிப்பும் செய்யப்படவில்லை. மாறாக கிராமப்புற ஏழை, எளிய மக்களை மேலும் வஞ்சிப்பதாகவே இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. அவர்கள் உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி கடந்த திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 98,000 கோடியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் 25 ஆயிரம் கோடி அதில் குறைக்கப்பட்டு 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு 2022ம் ஆண்டோடு முடிகிறது. அதை நீட்டிப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதில் செய்யப்படவில்லை. மாறாக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநிலங்களுக்கு சேர வேண்டிய நியாயமான தொகையை வழங்காமல் ஏய்க்கும் விதமாக கூடுதல் வரிகளை விதித்து சுரண்டுகிற மத்திய அரசு அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் கடன் கொடுக்கிறோம் என்று சொல்வது மக்களை வஞ்சிப்பது தவிர வேறில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கான நிதியை கடந்த ஆண்டைவிட 5 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறது மோடி அரசு. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் ப்ரிமெட்ரிக் (Prematric) படிப்பு உதவித் தொகைக்கான நிதி கடந்த ஆண்டைவிடக் குறைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கான நலத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஃபவுண்டேஷனுக்கு கடந்த ஆண்டு 76 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மதரஸா கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் 14 கோடியைக் குறைத்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்களிலேயே மிக மோசமானதாகவும், இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவும் உள்ள இந்த பட்ஜெட், உழைக்கும் எளிய மக்களுக்கு எதிரானது; உழைப்போரை உறிஞ்சும் பெருமுதலாளிகளின் கார்ப்பரேட்டுகள் மற்றும் முன்னேறிய மேட்டுக்குடியினருக்கும் பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x