Published : 02 Feb 2022 05:16 PM
Last Updated : 02 Feb 2022 05:16 PM
திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், திருச்சியில் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்துக்கு அந்தக் கட்சியினரே இன்று பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணியில் திமுக 51 வார்டுகளில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு வார்டிலும் போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளையில், காங்கிரஸுக்கு 4 வார்டுகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு வார்டும் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சக்கரபாணி, மனித உரிமைகள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஜிஎம்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் இன்று கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தைப் பூட்டு போட்டு பூட்டினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: ''மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன உட்பட எந்த விவரமும் கட்சித் தொண்டர்களுக்கு இதுவரை தெரியவில்லை. எல்லாமே ரகசியமாக உள்ளது. கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர், கடந்த 3, 4 நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை. யாரும் இல்லாத அலுவலகத்தைத் திறந்துவைத்து ஒரு பயனும் இல்லை. எனவே, பூட்டு போட்டு பூட்டினோம். காங்கிரஸுக்கு 4 அல்லது 5 வார்டுகள்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு குறைந்தது 10 வார்டுகளை பெற வேண்டும். தேர்தலில் போட்டியிட கட்சித் தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இதனிடையே, கட்சி அலுவலகத்தைப் பூட்டிய தகவலறிந்து மாவட்டத் தலைவர் தரப்பில் இருந்தும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பூட்டிய அலுவலகத்தைத் திறந்துவிட்டதுடன், எங்கள் கோரிக்கைகளை மாவட்டத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT