Published : 02 Feb 2022 03:07 PM
Last Updated : 02 Feb 2022 03:07 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி, அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 80,000 காவல்துறையினர், 1 லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது. தேர்தல் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதிலாக, தேர்தல் முடிந்துவிட்ட ஊரக பகுதி அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.
மேலும், தபால் வாக்கு எண்ணிக்கையில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும், இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தலை ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக பாபு முருகவேல் தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT