Published : 02 Feb 2022 01:33 PM
Last Updated : 02 Feb 2022 01:33 PM
மதுரை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்களை பாஜகவில் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. திமுகவில் 25 வார்டுகளுக்கும், பாஜகவில் 26 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் வார்டுகளில் பிரபலமானவர்களை பாஜகவினர் தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்து வருகின்றனர்.
எஸ்எஸ் காலனி முன்னாள் அதிமுக கவுன்சிலர் லட்சுமி சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தார். அப்போது, பாஜக மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் பாஜக பலம் அதிகரித்துள்ளது. பாஜகவின் உண்மையான பலத்தை தெரிந்துகொள்வதற்காக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம். தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13,000 வார்டுகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்ய பாஜக காத்திருக்கிறது. அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் மட்டும் இல்லாமல், திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களும் பாஜகவுக்கு வரவுள்ளனர். பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் பாஜகவினருடன் தொடர்பில் உள்ளனர்" என்றார்.
இந்நிலையில், மதுரை டிவிஎஸ் நகர் வார்டில் 2 முறை அதிமுக கவுன்சிலராக இருந்த ராஜா சீனிவாசன் இன்று மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். திமுகவில் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்கள் தங்கள் கட்சிக்கு வருவார்கள் என பாஜகவினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் சேர்பவர்களை அவர்கள் விரும்பும் வார்டில் வேட்பாளர்களாக அறிவிக்கவும் பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT