Published : 02 Feb 2022 09:35 AM
Last Updated : 02 Feb 2022 09:35 AM
சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையினை மக்களிடையே உருவாக்கும் என நம்புகிறேன் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தினை அதிமுகவின் சார்பில் வரவேற்கிறேன்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2 விழுக்காடாக இருக்கும் என்றும், மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இது உயர்வானது என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது, அனைத்துத் துறைகளும் வளர்ச்சி பெறும் வகையில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீட்டை மாநிலங்கள் அதிகரிக்கும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு இருப்பதும், வழக்கமாக மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிதி அல்லாமல், இந்த நிதி 50 ஆண்டு கால வட்டியில்லாக் கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்து இருப்பது மாநிலங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஏழை, எளிய மக்களுக்கான வீட்டு வசதி குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் இல்லம் என்பதன் அடிப்படையில், 80 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வீடில்லாத ஏழையெளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகுக்கும்.
இதேபோன்று, 3.8 கோடி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, அஞ்சல் அலுவலக கணக்குளிலிருந்து வங்கிக் கணக்குகளுக்கும், வங்கி கணக்குகளிலிருந்து அஞ்சலகக் கணக்குகளுக்கும் நிதி மாற்ற முறைக்கு வழிவகை, வருமான வரி தாக்கல் செய்தபின் மேம்படுத்தப்பட்ட வருமானவரி தாக்கல் செய்ய அனுமதி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 14 விழுக்காடு வரிச் சலுகை, தொடக்க நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை போன்ற திட்டங்கள் இளம் தொழில் முனைவோர்களை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணையாறு மற்றும் பெண்ணையாறு - காவேரி உள்ளிட்ட ஐந்து நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கான வரைவு விரிவு திட்ட அறிக்கைகள் முடிக்கப்பட்டுவிட்டன என்றும், பயன்பெறும் மாநிலங்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்பட்டவுடன் அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உதவி செய்யும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
25,000 கிலோ மீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும்.
வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் நவீன மயமாக்கல் ஆகியவற்றிற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து துறைகளும் மத்திய அரசால் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கை சாத்தியமானவைகளை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையினை மக்களிடையே உருவாக்கும் என நான் நம்புகிறேன்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT