Published : 02 Feb 2022 09:55 AM
Last Updated : 02 Feb 2022 09:55 AM

மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக-விசிக கூட்டணி அமைப்பதில் சிக்கல்

மதுரை

மதுரை மாநகராட்சி தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்கும் வார்டுகளை ஒதுக்காததால், திமுக கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ்-9, கம்யூனிஸ்ட்-8, மதிமுக-3, விசிக-2, மற்ற கட்சிகள்-4 என 26 வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கு 74 வார்டுகள் என முடிவு செய்யப் பட்டது.

இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மதிமுக 3 வார்டுகளுக்கு ஒப்புக் கொண்டாலும், அக்கட்சி கோரும் வார்டுகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கோருவதால் முடிவு ஏற்படவில்லை. அவனியாபுரம் வார்டு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதை விசிக கேட்கிறது. மகபூப்பாளையம் வார்டை விசிக கேட்ட நிலையில், அதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிராகரித்தார். மாடக்குளம் வார்டை விசிகவுக்கு வழங்க திமுக சம்மதித்த நிலையில் அக்கட்சி ஏற்கவில்லை.

விசிக தலைவர் திருமாவளவன், மதுரை திமுக நிர்வாகிகளிடம் பேசியும் முடிவு எட்டப் படவில்லை.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: 74 வார்டுகளுக்கும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்து தலைமைக்கு இரவில் அனுப்பப்படும். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் உள்ள வார்டுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் பிரச்சினை இல்லை. மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடிக்கிறது. முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி வென்ற வார்டை அவரது மகள் கேட்ட நிலையில் மாவட்ட பொறுப்பாளர் மறுத்துவிட்டார். இதுபோன்ற நிலை பல வார்டுகளில் உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு 22-ல் வென்ற எஸ்.கிருத்திகாவுக்கு மாநகராட்சி தேர்தலில் சீட் கேட்டு தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் அழுத்தம் கொடுத்தார். அப்படி வழங்கப்பட்டால் மாவட்ட ஊராட்சிக்கு இடைத்தேர்தல் வரும் என்பதால் முதல்வர்தான் முடிவு எடுக்க முடியும். திமுகவுக்கு 74 வார்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சு.வெங்கடேசன் எம்பி முதல்வரிடமே பேசி 8 வார்டுகளை பெற்று விட்டார். இதனால் 9 வார்டுகளை மட்டும் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x