Published : 01 Feb 2022 06:58 PM
Last Updated : 01 Feb 2022 06:58 PM
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், அதுகுறித்து பிப்.4-ல் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று மேலும் கூறும்போது, "முல்லைப் பெரியாறு அணையில் காலவாரியான நீர்மட்டம் (Rule Curve), அணையின் வழிந்தோடி மதகின் கதவுகளை இயக்குதல் (Gate Operation Schedule), அளவு மானிகள் பொருத்துதல் (Instrumentation), அணை பாதுகாப்பு ஆகியவை குறித்து கேரள மாநில நான்கு தனிநபர்கள் 2020 மற்றும் 2021-ல் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளுக்கு தேவையான மறுப்பு மனுக்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகள் 15.12.2021 அன்று விவாதத்திற்காக வந்தபொழுது, வாதி பிரதிவாதிகள் ஏதேனும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் 04.02.2022-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என ஆணையிட்டு வழக்கை வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
இவ்வழக்குகளில் தமிழகம், கேரள அரசுகள் முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு, மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக அரசு அதன் பதில் மனுக்களை உச்சநீதி மன்றத்தில் 06.02.2021, 20.04.2021, 16.11.2021 மற்றும் 14.12.2021 தேதிகளில் தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவும், மத்திய நீர்வளக் குழுமமும் இணைந்து பதில் மனுக்களை 19.04.2021 மற்றும் 14.10.2021 தேதிகளில் தாக்கல் செய்ததுடன், 27.01.2022 ம் தேதியில் மேலும் ஒரு நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், 27.01.2006 மற்றும் 07.05.2014 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அணை எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கிறதென்றும், எஞ்சிய பலப்படுத்தும் பணிகள், பராமரிப்பு மற்றும் செப்பனிடும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், இப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்பார்வைக் குழு 14 முறை பார்வையிட்டதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அதன் பதில்மனுவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதில் மனுவின் ஒரு பகுதியில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு தேவை என குறிப்பிட்டுள்ளது, முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
உச்ச நீதிமன்றமே அதன் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதிகளில் வழங்கிய ஆணைகளில் எஞ்சிய பலப்படுத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட பின்தான் பிரத்யேகமான நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதன்பின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பணிகளை முடித்தபின்தான் எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட வேண்டுமே தவிர, தற்போது அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய எந்த அவசியமும் இல்லை. அணையின் நீர்கசிவு (Seepage), சுண்ணாம்பு வெளியேற்றம் (Lime Leaching) இவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகமிக குறைவாகவே உள்ளது. ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும் அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும்.
மத்திய நீர்வள குழுமத்தின் (CWC) நிலை அறிக்கைக்கான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் 4.02.2022-க்குள் தக்க நடவடிக்கைக்காக தமிழக அரசு தாக்கல் செய்யும். நமது நிலைப்பாடு குறித்த தகுந்த வாதங்களை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்" என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT