Published : 01 Feb 2022 06:32 PM
Last Updated : 01 Feb 2022 06:32 PM
ராமேசுவரம்: யாழ்ப்பாணம் கடலில் மாயமான இரு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தமிழக மீனவர்களின் விசைப்படகினால் இவர்கள் மூழ்கடிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி இலங்கை மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் பலமுறை நடத்தப்பட்டும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடிமுறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட கடல்வளம்: ஆனால், இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் தேவை எனவும், இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்வதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால் இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் கடல் வளங்களை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். அதேசமயம் பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில் தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக்கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாட்டினை எட்ட முடியாமல் போனது.
கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் கடற்பகுதியில் தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திய குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மூன்று மாதங்களாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். மேலும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திலும் இது குறித்து புகார் மனுக்களும் அளிக்கப்பட்டன. அது கடந்த வாரம் நாகை மாவட்ட மீனவர்கள் நால்வர் மீது நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவமும் நடைபெற்றது.
வடமராய்ச்சி கடற்பகுதியில் ஒதுங்கிய இரு உடல்கள்: இந்நிலையில், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை ஒரு பைபர் படகில் தணிகைமாறன், பிரேம்குமார் என்ற இரண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மறுநாள் வெள்ளிக்கிழமை கரை திரும்ப வேண்டிய இரண்டு மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து சுப்பர்மடம் கடற்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீட்பு படகுகள் மூலம் மாயமான இரண்டு மீனவர்களையும் தேடினர். தேடுதலின்போது மாயமான இரண்டு மீனவர்களும் பயன்படுத்திய வலைகள் சேதப்படுத்திய நிலையில் நடுக்கடலில் கண்டெடுத்தனர். தொடர்ந்து இரண்டு மீனவர்களின் உடல்கள் திங்கட்கிழமை அடுத்தடுத்து வடமராய்ச்சி கடற்பகுதியில் ஒதுங்கியது.
இலங்கை மீனவர்கள் போராட்டம்: இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களையும் கண்டித்தும், தமிழக விசைப்படகினால் மோதியதால் தான் தணிகைமாறன் மற்றும் பிரேம்குமார் ஆகிய இரண்டு மீனவர்களும் மூழ்கி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாக சுப்பர்மடம் கடல் தொழிலாளர் சங்கம் சார்பாக சுப்பர்மடத்தில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். நடைபெற்றது. மேலும் மருதங்கேணி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்கிழமை மீனவர்கள் போராட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து இலங்கையின் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மீனவ அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் இலங்கை தமிழ் மீனவர்கள் தொடர் போராட்டங்களை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
இலங்கை தமிழ் மீனவர்களையும், தமிழக விசைப்படகு மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தால் விரைவில் இரு நாட்டு மீனவர்களிடையே கடலிலேயே போர் கூட ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT