Published : 01 Feb 2022 04:55 PM
Last Updated : 01 Feb 2022 04:55 PM
மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் பரிசாக வழங்கிய ‘ஃபாதர் பிள்ளையாரை’ தான் தினமும் பூஜித்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவில் மதமாற்றம் தொடர்பாக பல்வேறு உதாரணங்களை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம்: ’இந்த வழக்கில் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்து வந்த பள்ளி இயேசு சபையால் நடத்தப்படும் பள்ளியாகும். புனித பைபிளில் மத்தேயு என்ற அதிகாரத்தில், ‘ஆகவே செல், அனைத்து நாடுகளிலும் சீடர்களை உருவாக்கு, பரிசுத்த ஆவி, தந்தை மற்றும் மகன் பெயரால் ஞானஸ்தானம் செய்து வை, நான் இட்ட கட்டளைகளை அடிபணிந்து நடக்க அவர்களுக்கு கற்பி’ என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இயேசு கிறிஸ்து, ‘உலகம் முழுவதும் செல், ஒவ்வொரு படைப்பினத்திடமும் புனித ஆவி குறித்து பிரசங்கம் செய், யார் நம்புகிறார்களோ மற்றும் யார் ஞானஸ்தானம் பெறுகிறார்களோ அவர்கள் காப்பாற்றப்படுவார்கள், யார் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று கூறுகிறார். இது கிறிஸ்தவ இறையியலில் மிகப்பெரிய கட்டளை என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்து ஆங்கில நாளிதழில் வந்த புத்தகத் திறனாய்வில், கோவாவில் எவ்வாறு மதமாற்றம், கிறிஸ்துப்படுத்துதல் மற்றும் காலனி ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக கோவா சமூகம் எவ்வாறு எதிர்வினை ஆற்றியது என்பது கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், போர்த்துக்கீசியர்கள் உடைய காலனியாதிக்க திட்டங்கள், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தினாலும் கோவா சமூக மக்கள் எவ்வாறு சமூக இணக்கத்தை கடைபிடித்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தி திரைப்படம்
இந்தி நடிகர் நவ்சுதீன்சித்திகி நடித்த மும்பையில் வசித்து வந்த தமிழ் பட்டியல் வகுப்பை சேர்ந்த அய்யன்மணி என்பவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான இந்தி படத்தில் அய்யன் மணிக்கும், அவர் மகன் ஆதி படித்து வரும் கிறிஸ்தவ பள்ளி முதல்வருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இவ்வாறு இருக்கும்:
அய்யன்மணி: என் மகனின் ஐகியூ- 169. அவர் உங்கள் பள்ளி பாடத்திட்டத்தை விட மேம்பட்டவர். அவர் வேறுபட்ட நபராக உள்ளார்.
முதல்வர்: ஆமாம், இயேசு கிறிஸ்து ஆதிக்கு சிறந்த மனதை கொடுத்துள்ளார். கடவுளை போற்றுங்கள்.
அய்யன் மணி மனைவி: அது கடவுள் மீனாட்சியின் அருள். நான் கர்ப்பமான இருக்கும்போது விநாயகர் கோவிலுக்கு வெற்றுக்காலில் பாதயாத்திரையாக சென்றிருக்கிறேன்.
முதல்வர்: மணி உங்களுக்கு இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை உள்ளதா?
அய்யன் மணி: ஆம், இயேசு கிறிஸ்து மீது அன்பு உள்ளது.
முதல்வர்: இயேசு கிறிஸ்துவும் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார். நீங்களும், ஆதியும் முறைப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், நமது பள்ளியின் பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிறிஸ்தவர்கள் அடிப்படையில், சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நேரடியாக 9-ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படும். அதே நேரத்தில் அது கட்டாயம் அல்ல. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதும் இல்லை.
நீங்கள் உங்கள் நண்பரான சயாலியின் தந்தை சதீஷிடம் கேட்டு, அவரது குடும்பம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் எவ்வளவு லாபம் அடைந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் சமூக மக்களின் நிலையை தெரிந்து தான் இதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
முதல்வர்: இலவசமாக புத்தகம் வழங்கப்படும். இலவச போக்குவரத்து வசதியும் செய்து தரப்படும்.
தமிழ்த் திரைப்படம்
அதேபோல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின், ‘கல்யாண அகதிகள்’ படத்தில் அம்முலு என்ற இந்து பெண், ராபர்ட் என்ற கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பார். ராபர்ட்டின் பெற்றோர், அம்முலு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டு எமிலியாக பெயர் மாற்றம் செய்து கொண்டால் அவரை மருமகளாக ஏற்றுக்கொள்வதாக தெரிவிப்பர். அம்முலு மதம்மாற மறுக்கும் போது, அவரிடம் ராபர்ட், எங்கள் குடும்பம் என்ன உன்னிடம் வரதட்சணையா கேட்கிறது, மதம் மாறத்தானே சொல்கிறோம் என்பார். அதற்கு அம்முலு, ‘ பணத்துக்கு பதிலாக என் மதத்தை விட்டுத்தர கூறுகிறீர்கள். இதுவும் ஒரு விதமான வரதட்சணை தானே’ என்பார்.
ராபர்ட் இறுதியாக என்ன சொல்கிறாய் என்று கேட்கும்போது, ‘மதம் எனது பிறப்பு. அதை விட்டுத்தர முடியாது என்று கூறி ராபர்ட் உடனான காதல் உறவை முறித்துக்கொண்டு வெளியேறிவிடுவார் அம்முலு. நீதிமன்ற தீர்ப்புகளில் இதுபோன்ற பிரபலமான கலாச்சாரங்களை குறிப்பிட முடியுமா என்று கேட்கலாம். ஏன் குறிப்பிடக்கூடாது? கண்டிப்பாக குறிப்பிடலாம். கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திரைப்படங்கள் குறிப்பாக, தமிழ் திரைப்படங்களில் மிகைப்படுத்தல் இருந்தாலும் உண்மையும் இருக்கிறது.
ஃபாதர் பிள்ளையார்
சிறு வயதில் இருந்து விநாயகர் எனக்கு மிகவும் பிடித்த கடவுள். அந்த வரிசை இப்போது அதிகரித்துள்ளது. புதிதாக மகாவீரர் வந்துள்ளார். இந்த கடவுள்களுக்கு நான் தினமும் பூ வைத்து பூஜிப்பேன். நான் தினமும் வணங்கும் விநாயகருக்கு ஃபாதர் (பங்குதந்தை) பிள்ளையார் என்று பெயர். ஏனென்றால் அந்தப் பிள்ளையாரை எனக்கு வழங்கியவர், இந்த வழக்கில் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் மற்றும் வழக்கறிஞர் பெனிட்டோ என்ற சர்வமத சகோதரத்தின் உண்மையான தூதுவர்கள். மூத்த வழக்கறிஞர் வாதிடும்போது, மதமாற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். இதை அவர் இதயத்தில் இருந்து தெரிவித்திருப்பார் என எனக்கு தெரியும். ஆனால் சகாயமேரியும் (வழக்கில் கைது செய்யப்பட்டவர்), ரசேல் மேரியும் (பள்ளி முதல்வர்) அவரைப் போல் இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்.’
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT