Published : 12 Apr 2016 02:07 PM
Last Updated : 12 Apr 2016 02:07 PM

கவன ஈர்ப்புத் தொண்டர்: அதிமுக கோஷத்தால் அறியப்படும் மோதிரம் பொன்னுசாமி

நான் சென்றிருந்தபோது பரபரப்பாக இருந்தது போயஸ் கார்டன். அங்கு வந்து செல்லும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவருக்குமே தெரிந்தவர் பெயர் 'மோதிரம்' பொன்னுசாமி. காண்போரை தெறிக்கவிடும் அளவுக்கு கோஷம் எழுப்புவதையே தனது சிறப்பு என சிலாகித்துக் கொள்பவர்.

வி.ஐ.பி. அல்லாமல் போனாலும் கவனிக்கத்தக்க தொண்டராக வலம் வருபவர். அவரது கைகளில் போடப்பட்டுள்ள 21 பவுன் மோதிரங்கள்தான் அவருக்கு அடையாளம். அந்த மோதிரங்களுக்குப் பின்னால் பல 'சரித்திர' நிகழ்வுகளை நினைகூர்ந்து வைத்திருக்கிறார். கோஷம் எழுப்பியே கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்தவர். அவரிடம் பேசினேன்.

"1972ல் தலைவர் பிரிந்து வந்த காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறேன். அம்மா அறிவித்த போராட்டம், பொதுக்குழு கூட்டம் என தமிழகத்தில் எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொள்வேன். நிறைய இடைத்தேர்தலுக்குப் போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். கட்சி கட்சி என்று நிறைய பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

1987-ல் தலைவர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவருடைய படத்தை வைத்து இந்த மோதிரத்தைப் போட்டேன். 1991 அம்மா முதலமைச்சரான உடன் அவங்களோட படத்தை வைத்து இந்த மோதிரத்தைப் போட்டேன். இப்போது கர்நாடகாவில் வழக்கில் அம்மா ஜெயித்தவுடன் ஒரு மோதிரம் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் போடவில்லை.

இந்த மோதிரங்களைப் போட்டிருப்பதில் எனக்கு எந்தவித கஷ்டமும் இல்லை. விவசாயம் பண்ணும்போது மட்டும் கழட்டி என் மனைவியிடம் கொடுத்திருப்பேன். முடிந்தவுடன் மறுபடியும் மாட்டிக் கொள்வேன்.

1987-ல் மோதிரம் செய்யும்போது 3500 ரூபாய் ஒரு பவுன். 10 பவுனில் பண்ணினேன். அம்மா படம் போட்ட மோதிரம் 11 பவுன். பிரேஸ்லட் ஒரு 11 பவுன்" என்று மனிதர் கூலாக அடுக்கும்போது இப்போது தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் அனிச்சையாக யோசிக்கத் தொடங்கினேன்.

குடும்பத்தைப் பற்றி விவரித்தவர், "விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். 3 குழந்தைகள். ஒரு பெண் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி, ஒரு பையன் பொறியியல் முடித்திருக்கார். இன்னொரு பெண் பொறியியல் படிக்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தேன். முழுக்க அரசியல்தான் நமக்கு ஆர்வம். நான்கு ஏக்கர்தான் என்றாலும் வீட்டில் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

புதிய தமிழகம் கட்சி ஆரம்பித்த போது நான் அவர்களோடு போகவில்லை என்ற காரணத்தில் எங்கள் ஊர்க்காரர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அப்போதும் இந்த இயக்கத்தில்தான் இருந்தேன். என் அரசியல் செயல்பாடுகளை என் பிள்ளைகள் விமர்சித்ததே இல்லை" என்றார் பெருமிதத்துடன்.

முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தது உண்டா என்று கேட்டபோது, "1994ல் விருதுநகர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க அம்மா வந்தார்கள். அப்போது சாத்தையா எம்.எல்.ஏ உடன் சென்று பரிசு கொடுத்திருக்கிறேன். 2013-ல் அம்மா சென்னையில் உடற்பயிற்சி கூடம் ஒன்று திறந்து வைத்தார்கள். நான் எங்கு போனாலும் கோஷம் போடுவேன், அப்போதும் கோஷம் போட்டேன். உடனே அம்மா அழைத்தார்கள், நான் மனு கொடுப்பதற்குள் எஸ்கார்ட் என்னை தடுத்துவிட்டார்" என்று சோகமாக முடித்துக்கொண்டார் 'மோதிரம்' 'மோதிரம்' பொன்னுசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x