Published : 01 Feb 2022 01:03 PM
Last Updated : 01 Feb 2022 01:03 PM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயர் விசாலாட்சியின் மகளான, 22 வயதே ஆன இளம்பெண்ணுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் வெளியிட்டார்.
திருப்பூர் மாநகராட்சியில் 25-வது வார்டில் பூபேஷ், 30-வது வார்டில் முத்துலட்சுமி, 48- வது வார்டில் விஜயலட்சுமி, 51- வது வார்டில் செந்தில்குமார் மற்றும் 55- வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்தது.
இதில், 55-வது வார்டில் போட்டியிடும் தீபிகா அப்புகுட்டி, முன்னாள் மேயர் அ.விசாலாட்சியின் மகள் ஆவார். விசாலாட்சி, அதிமுகவில் இருந்தபோது மேயராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். தற்போது அமமுகவில் தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திருப்பூர் தெற்கு தொகுயில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
22 வயதான தீபிகா அப்புக்குட்டி, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மகிளா காங்கிரஸில் மாநில செயலாளராக உள்ளார். சட்டம் பயின்றுள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் போதே, அவரது மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT