Published : 31 Jan 2022 08:46 PM
Last Updated : 31 Jan 2022 08:46 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும், இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், '2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் அதிமுகதான் முடிவு செய்யும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
அண்ணாமலை: தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிடும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஜக தொண்டர்கள் நிற்க வேண்டும், தலைவர்கள் நிற்க வேண்டும், கட்சியினர் நிற்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கின்ற அதிமுகவும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதிமுகவின் முக்கியமான தலைவர்கள் பாஜகவுக்கு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் அதிகமாக கேட்டிருந்தோம். எங்கள் தரப்பு பட்டியலை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், அதிமுக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை; அவர்களால் கொடுக்க முடியாத சூழலும் இருந்தது.
இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்பு, முக்கிய முடிவு எடுத்துள்ளோம். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறோம். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை அனைத்து இடத்திலும் நிறுத்தப் போகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுடன் கூட்டணி இல்லை என்பது கடினமான முடிவென்று சொல்ல மாட்டோம். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு. இந்த முடிவுக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை ஏற்றுக்கொண்டு முழு மனதோடு எங்களுக்கு இந்த சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
வரும் நாட்களில் பாஜக - அதிமுக நல்லுறவு தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி அகில இந்திய அளவில் தொடரும். 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நம்முடைய கூட்டணி தொடரும் அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதிமுக குறித்து நயினார் நகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதற்கும் தனித்துப் போட்டியிடுவதற்கும் தொடர்பு இல்லை" என்றார் அண்ணாமலை.
ஜெயக்குமார்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இதில் கூட்டணி இல்லை. பாஜக தனியாக நிற்கிறது. எங்களது தலைமையில் சில கட்சிகளுடன் சேர்ந்து நாங்களும் மக்களை சந்திக்க இருக்கிறோம்.
எதிர்வரும் காலத்தில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதேபோல் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விருப்பத்தை கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். எதிர்காலம் குறித்து எங்களது கட்சியே முடிவு செய்யும்.
சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், அதிமுக சிங்கம். அதனால் அந்த சிங்கம் வந்து வெற்றி பெறும். மற்றதெல்லாம் எப்படியும் கூட்டமாகத்தான் வரும். எங்களைப் பொறுத்தவரை வரலாறு இருக்கு, தனியாக நின்று ஜெயித்த வரலாறு இருக்கு. அந்த சிங்கத்துடைய வரலாறுதான் எங்களுடைய வரலாறு. சிங்கிளாகவே வந்து சில கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம்" என்று ஜெயக்குமார் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி: இதனிடையே, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக நிற்கின்றன. எதிர்காலத் தேர்தல்களைப் பொறுத்தவரையில், அந்த நேரத்தில் நாங்கள் பதில் சொல்வோம். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட விரும்புவதால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக வெளியேறிவிட்டது என்று சொல்வது தவறான வார்த்தை. தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு இணைந்து செயல்படுகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம் என்பதால் இந்தத் தேர்தலில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளோம். நயினார் நகேந்திரன் அப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டார். அதை மன்னிக்கும் மனப்பக்குவம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT