Published : 31 Jan 2022 02:17 PM
Last Updated : 31 Jan 2022 02:17 PM
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தியதாக கி.வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது .
கடந்த 2016-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது, சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அமுல்படுத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் கி.வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட எட்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரதேவன், ’ஜனநாயக ரீதியாகத்தான் போராட்டம் நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரிதான் போராட்டம் நடைபெற்றது. மேலும், இந்த வழக்கில் புகார்தாரரே விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT