Published : 13 Apr 2016 11:58 AM
Last Updated : 13 Apr 2016 11:58 AM

நீலகிரி மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மீண்டும் தக்க வைக்குமா திமுக?

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் என மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுக்க திமுக மற்றும் காங்கிரஸுக்கு எதிரான அலை வீசியபோதும் மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளை (குன்னூர், கூடலூர்) திமுக வென்றது. இப்போது அவற்றின் நிலை என்ன? அவை குறித்த ஒரு சிறிய அலசல்.

உதகையில் காங்கிரஸை வீழ்த்தி 32 ஆண்டுகளுக்கு பின்னர் அதிமுக வெற்றி பெற்றது. அப்போதிலிருந்தே நீலகிரியில் உள்ள மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் திமுகவினரும் தங்கள் கோட்டையை மீண்டும் தக்கவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகையில், அதிமுக வேட்பாளராக தொதநாடு சீமையை சேர்ந்த கப்பச்சி டி.வினோத் களமிறக்கப்பட்டுள்ளார். ‘தொதநாடு சீமை’ படுகரின மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் இவருக்கு பெரும்பலம். அதே சமயம் உதகை நகரப் பகுதி, திமுக மற்றும் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது. உதகை மக்களுக்கு வினோத் அறிமுகமானவர். கட்சியினர் மத்தியிலும் நன்கு பரிச்சயமானவர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கடந்த தேர்தலில் தோற்ற கணேஷ் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்கூட போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள் தொகுதி மக்கள்.

குன்னூர்

கடந்த 1957-ம் ஆண்டு முதல் இது வரை நடந்த தேர்தல்களில் திமுக 8 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் முழுக்க அதிமுக அலையடித்த கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் வென்றார்.

இந்த தொகுதியில் படுகர் மக்களுக்கு இணையாக தாயகம் திரும்பியோர், இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர். கடந்த முறை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இம்முறை அதிமுக நேரடியாக களம் காண்கிறது. வேட்பாளராக சாந்தி ஏ.ராமு களத்தில் உள்ளார். அவரது சொந்த ஊரான கோத்தகிரியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், மாற்றுக் கட்சியிலிருந்து சமீபத்தில் கட்சியில் இணைந்தவருக்கு சீட் கொடுக்கப்பட்டதால், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தி உள்ளது. இப்படியிருக்க, குன்னூர் தாலுகாவில் திமுகவின் பலம் குறையாமல் உள்ளது. தேயிலை தொழில் அதிகமுள்ள இந்த தொகுதியில், தேயிலை குடோன்களை மேட்டுப்பாளையத்துக்கு மாற்றும் நடவடிக்கை எடுத்ததால் தேயிலை தொழிலை சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி உள்ளது.

கூடலூர்

கூடலூர் தனித் தொகுதியாக உள்ளதால், அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் தாட்கோ தலைவர் எஸ்.கலைச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாயகம் திரும்பியோர் அதிகம் வசிக்கிறார்கள். திமுகவுக்கு பலம் மிகுந்த தொகுதி. குன்னூரைப் போலவே கடந்த 2011 தேர்தலில் இங்கே, திமுகவை சேர்ந்த திராவிட மணி வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுவுக்கு முன்னிலை பெற்றுத்தந்த தொகுதி.

அந்த வெற்றி திரும்பவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே கடந்த 2 ஆண்டுகளாகவே அதிமுக கடுமையாக இங்கு பணியாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கியஸ்தர்கள் அதிமுகவில் இணைக்கப்பட்டனர். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் மீது உள்ள குற்றவியல் வழக்குகள், அதிமுகவுக்கு பின்னடவையே ஏற்படுத்தும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேமுதிக உடனிருந்த நிலையிலேயே தோல்வியை சந்தித்தது அதிமுக. இம்முறை தனியாக களம் காண்பது அதிமுகவுக்கு எதிராகவே அமையும் என்றும் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x