Published : 31 Jan 2022 10:32 AM
Last Updated : 31 Jan 2022 10:32 AM
மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, முதல் தேர்தலை சந்திக்கும் சிவகாசியை தங்களுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் காங் கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
சிவகாசி 28.5.2013 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்தது. நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நகராட்சியில் 78 ஆயிரம் பேரும், திருத்தங்கல் நகராட்சியில் 60 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர்.
சிவகாசியில் 23.10.2017 அன்று நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் பழனிசாமி பேசுகையில், சிவகாசி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். முதல் கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து 48 வார்டுகளாக்கி சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அண்மையில் நடந்த விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, சிவகாசியில் 43,158 வாக்குகளும், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 80,863 வாக்குகளும் பெற்றார். அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சொந்தத்தொகுதியிலேயே மாணிக்கம்தாகூர் 37,705 வாக்குகள் அதிகம் பெற்றார்.
தொடர்ந்து நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் வெற்றி பெற்றார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 31 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும், திமுக 17 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டு களிலும் வெற்றி பெற்றன. இதில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி ஒன்றியத் தலைவராகவும், அவரது கணவர் விவேகன்ராஜ் ஒன்றிய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாநகராட்சி யாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள சிவகாசி முதல் தேர்தலை சந்திக் கிறது. இதுவரை திமுக கூட்டணி பலத்தோடு போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறையும், சிவகாசி மாநகராட்சியை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தனது மருமகள் பிரியங்காவை நிறுத்த அசோகன் எம்எல்ஏ திட்டமிட்டுள் ளதாகவும், காங்கிரஸில் இருந்து த.மா.கா.வுக்குச் சென்று தற்போது திமுகவில் இணைந்திருக்கும் சிவகாசி நகராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் தனது குடும்ப உறுப்பினரை களம் இறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசியை காங்கிரஸுக்கு திமுக தாரை வார்க்கப்போகிறதா? அல்லது தன்னிடமே தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இரு கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT