Published : 31 Jan 2022 10:48 AM
Last Updated : 31 Jan 2022 10:48 AM

சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தம்: ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புகள்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்காக இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 2 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 2-ம் கட்ட அகழாய்வின் போது பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. ஆவாரங்காடு திரட்டு பகுதி யில் சுடாத செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டி திரட்டில் செங்கற்களால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என, முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. மூலக்கரை பகுதி யில் கல்வட்டங்கள் கிடைத்தன.

முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவற்றின் வயது 3,200 ஆண்டுகள் என்றும், தாமிரபரணிக்கரை ‘பொருநை நாகரிகத்தின்’ வயது 3,200 ஆண்டுகள் என்றும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி யுள்ளன. அகழாய்வு மேற் கொள்ளக் கூடிய இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. சிவகளை அகழாய்வு கள இயக்குநர் பிரபாகர் தலைமையில், தொல்லியல் அலுவலர்கள் விக்டர் ஞானராஜ், பரத் மற்றும் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடைபெற்றது.

முதுமக்கள் தாழிகள் திறப்பு

ஆதிச்சநல்லூரில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் நேற்றுமுன்தினம் மாலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டன. அவற்றில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், தாடை, பற்கள் இருந்தன.

முதுமக்கள் தாழியில் இருந்த தாடை மற்றும் பற்கள் மூலம் பழங்கால மனிதனின் காலத்தையும், வாழ்க்கை முறை யையும் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x