Published : 31 Jan 2022 09:52 AM
Last Updated : 31 Jan 2022 09:52 AM

நாயுடுமங்கலத்தில் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் அக்னி கலசத்தை மீண்டும் நிறுவ வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி வேண்டுகோள்

தி.மலை அடுத்த நாயுடுமங்கலத்தில் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி பார்வையிட்டார். அடுத்த படம்: சேதப்படுத்தப்பட்ட அரசு பேருந்து கண்ணாடி.

திருவண்ணாமலை

தி.மலை அடுத்த நாயுடுமங்கலத் தில் கடந்த 1989-ல் நிறுவப்பட்ட அக்னி கலசம், சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது.

பின்னர் பணிகள் நிறைவு பெற்றதும், அதே இடத்தில் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில், காவல்துறை பாதுகாப்புடன் கடந்த 27-ம் தேதி வருவாய்த் துறையினர் அகற்றினர். இதற்கு, கண்டனம் தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாயுடுமங்கலத் தில் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர், வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இதையடுத்து அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நாயுடு மங்கலத்தில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. கடந்த1989-ல், வன்னியர்கள் வாழும் இடத்தை அடையாளம் காட்டுகின்ற உயிர்நாடி சின்னமான அக்னி கலசத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக, அக்னி கலசத்தை எடுத்துவிட்டு மீண்டும் வைத்து தருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வன்னியர்கள் பெருந்தன்மையாக சம்மதித்தார்கள்.

பின்னர், பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்னி கலசத்தை அகற்றியுள்ளனர். இது ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையும் பிற்படுத்தும் செயலாக உள்ளது.

நாயுடுமங்கலம் பகுதியில் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் அக்னி கலசத்தை தமிழக அரசு மீண்டும் வைக்க வேண்டும். மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரது வழியில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

அக்னி கலசத்தை மீண்டும், அதே இடத்தில் வைக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல், அக்னி கலசத்தை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். நாங்கள் அமைதியாக இருப்போம். எங்கள் விவகாரத்தில் அத்துமீறி தலையீட்டால் அடக்கி வைப்போம். எங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளோம். எங்கள் உரிமையை நிலை நாட்ட, எந்த விதத்திலும் சமாதானமாக மாட்டோம். போராடுவோம், உரிமையை பெறுவோம்.

வன்னியர் களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இப்போது, அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக எதிரொலிக்கும்” என்றார்.

இதற்கிடையில், அப்பகுதி வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடி நொறுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x