Published : 30 Jan 2022 05:17 PM
Last Updated : 30 Jan 2022 05:17 PM
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி இடத்தில் மகளிர் தங்கும் விடுதி நடத்தும் ரோட்டரி கிளப் 20 ஆண்டுகளாக ரூ. 61 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது ஆர்டிஐயில் தகவல் கிடைத்துள்ளதையடுத்து ஆளுநர், முதல்வரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான செஞ்சி சாலையில் உள்ள இடத்தில் ரோட்டரி கிளப் (மத்திய-மாநில அரசு நிதியுடன்) பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதற்கு இவர்கள் பல ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் உள்ளது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல்கள் கோரினார்.
இதையடுத்து கிடைத்த தகவல்களையடுத்து ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் மனு தந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த மனு பற்றி கூறியதாவது:
"புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் மகளிர் தங்கும் விடுதி நடத்துகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2022 வரை 20 ஆண்டுகளாக நிர்ணயம் செய்த வருட வாடகை செலுத்தப்படவில்லை. குறிப்பாக ஆண்டு வாடகையில் 10 சதவீதத்துக்கும் குறைவான தொகையை மட்டும் காலி செய்யாமல் இருப்பற்காக செலுத்தினர். கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்த குறைந்தப்படச தொகையை செலுத்துவதையும் நிறுத்திவிட்டனர்.
குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் வாடகையாக ரூ. 65 லட்சம் செலுத்தியிருக்கவேண்டும். இதுவரை ரூ. 3.95 லட்சம் மட்டும் செலுத்தி ரூ. 61.1 லட்சம் நிலுவை வாடகை செலுத்தாமல் உள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.
தற்பொழுது புதுச்சேரி நகராட்சியினர் லட்ச ரூபாய் நிலுவைத் தொகை வைத்திருந்தாலும் கூட சீல் வைத்து சட்டரீதியாக நிலுவைத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வரும்பொழுது, பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ள இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் 20 ஆண்டுகளாக எடுக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது.
புதுச்சேரி நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் ஊழியர்களுக்கே மாதா மாதம் உரிய காலத்தில் ஊதியம் வழங்க முடியாமலும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிலுவைத் தொகை வழங்க முடியாத நிலையிலும் உள்ளபொழுது 20 ஆண்டுகளாக லட்சக்கணக்கான நிலுவைத் தொகையை வசூலிக்காமல் மௌனம் காத்து வருவது ஏற்புடையதல்ல.
எனவே புதுச்சேரி நகராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்கும் விதமாக இந்த நிலுவைத் தொகையினை வசூலிக்க வேண்டும் . இதுபோல் லட்சக் கணக்கான நிலுவைத் தொகை வைத்துள்ள பிற நிறுவனங்களிடமும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT