Published : 30 Jan 2022 04:43 PM
Last Updated : 30 Jan 2022 04:43 PM

தூர்தர்ஷன் தமிழ் சேனலில் எச்டி தொழில்நுட்பத்தில் செய்தி, புதிய நிகழ்ச்சிகள்: மத்திய அமைச்சர் முருகன் தகவல்

சென்னை: தூர்தர்ஷனின் தமிழ் சேனல், புதிய நிகழ்ச்சிகளுடனும், செய்திகளுடனும் எச்டி தொழில்நுட்பத்தில் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சென்னை தொலைகாட்சி நிலையத்திற்கு வருகை புரிந்தார்.

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், அவரது பாராட்டைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண் விபாரி தாயம்மாளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், தாயம்மாளின் கிராமத்தில் உள்ள இடைநிலைப் பள்ளி மேம்பாட்டுக்காக ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டினார்.

அவரது அருஞ்செயலை பிரதமர் தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியதை அமைச்சர், தாயம்மாளிடம் சுட்டிக்காட்டினார்.பின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்ற அமைச்சர் அவை இயங்கும் விதத்தைப் பார்வையிட்டார். அமைச்சருடன் தலைமை இயக்குநர் மயங்க் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல் முருகன், தூர்தர்ஷனின் தமிழ் சேனல், புதிய நிகழ்ச்சிகளுடனும், செய்திகளுடனும் எச்டி வடிவில் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான நிகழ்ச்சிகளைத் தர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று கூறிய அவர், இந்த விஷயத்தில் யாருடைய வேலைக்கும் பாதிப்பு இராது என்று உறுதியளித்தார்.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர்,சென்னையில் பிப்ரவரி 15-ம் தேதி மாநாடு நடைபெறும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில், வர்த்தகத்துறை பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x