Last Updated : 30 Jan, 2022 04:24 PM

 

Published : 30 Jan 2022 04:24 PM
Last Updated : 30 Jan 2022 04:24 PM

திருச்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 4 வார்டுகள் ஒதுக்கீடா?

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நாளைதான் (ஜன.31) பேச்சுவார்த்தை தொடங்கப்படவுள்ளது என்றும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் திருச்சி தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுள்ள ஜெரோம் ஆரோக்கியராஜ், சுஜாதா, லெனின் பிரசாத் மற்றும் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் காங்கிரஸ் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

”திமுகவிடம் எத்தனை வார்டுகளை கேட்டுப் பெற வேண்டும், அவர்கள் ஒதுக்க சம்மதிக்கும் வார்டுகள் என்னென்ன என்பன போன்ற விவரங்கள் குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து, கட்சி மேலிடம் அனுமதி அளித்த பிறகே வார்டு ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுவினர் இதுவரை கூட்டணி தலைமையான திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

ஆனால், கட்சியின் 3 மாவட்டத் தலைவர்களும் திமுகவிடம் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக காங்கிரஸுக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் வருகிறது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

திமுகவிடம் தன்னிச்சையாக வார்டு ஒதுக்கீடு குறித்து மாவட்டத் தலைவர்கள் பேசியது கட்சித் தலைமையை மீறிய செயல். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கே.எஸ்.அழகிரி அறிவுரையின்படி தேர்தல் பணிக் குழுவினர் நாளை பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு திருச்சி மாநகராட்சி உருவாகும் வரை ஒரு முறை திமுகவும், ஏனைய காலம் முழுவதும் காங்கிரஸும் நகராட்சித் தலைவர் பதவியை வகித்தது.

திருச்சி மாநகராட்சி ஆன பிறகு 3 முறை காங்கிரஸாரும், ஒரு முறை அதிமுகவினரும் மேயராக இருந்துள்ளனர். மேலும், மாநகராட்சிக்கு நடைபெற்ற அனைத்து வார்டு உறுப்பினர் தேர்தல்களிலும் கணிசமான எண்ணிக்கையில் காங்கிரஸார் வெற்றி பெற்றனர்.

திருச்சி மாநகரில் நீண்ட நெடிய பின்னணி கொண்ட காங்கிரஸ் கட்சியை கூட்டணி தலைமையான திமுக பிற கட்சிகளைப்போல் பார்க்கக் கூடாது. மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவதுபோல் குறைந்த எண்ணிக்கையில் வார்டு ஒதுக்கக் கூடாது. அதிக எண்ணிக்கையில் வார்டுகளை ஒதுக்க வேண்டும். எனவே, காங்கிரஸுக்கான வார்டு ஒதுக்கீட்டில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திமுகவிடம் இனிமேல்தான் முறைப்படி பேச்சுவார்த்தை தொடங்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தையின்போது வார்டு ஒதுக்கீட்டில் காங்கிரஸை சமமாக நடத்த வேண்டும்” என்றனர்.

பெண் நிர்வாகி போராட்டம்..

கூட்டம் முடிந்த நிலையில் காங்கிரஸ் சேவா தள மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீஸ்வரி, காங்கிரஸ் கட்சிக்கு அதிக வார்டுகளை கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சிக்கு அதிக வார்டுகளை கேட்டுப் பெறாவிட்டால், தான் உட்பட பலரும் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x