Published : 30 Jan 2022 08:58 AM
Last Updated : 30 Jan 2022 08:58 AM
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முதல்நாளில் இடம்கிடைத்த 541மாணவர்களில் கோவையைச் சேர்ந்த 9 பேருக்கு மட்டும் இடம்கிடைத்தது. கரோனா ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை போன்றவற்றால், நீட் தேர்வுக்கு தயாரான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதல்களும், நேரடிப் பயிற்சியும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையை மாற்றும் வகையில், இனிவரும் ஆண்டில் கூடுதல் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைக்கும் வகையில் நேரடிப் பயிற்சி அளிக்க மாவட்ட பள்ளிக் கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளது.
அனைத்தும் இலவசம்
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா கூறியதாவது: இடஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குத்தான் முதலில் கலந்தாய்வு நடைபெறுகிறது. நீட் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்களை பெறுவோருக்கு, முக்கியமான மருத்துவக் கல்லூரிகளில் இடம்கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெறும் மாணவர்களுக்கு படிக்கும் வரை கல்வி, உணவு, உடை, தங்கும் விடுதி போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். கோவையில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்கள் வழங்கப்பட்டு, கடந்த செப்டம்பர் முதல் வாரந்தோறும் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடைபெற்று வந்தது.
80 மாணவர்களுக்கு பயிற்சி
இனி வரும் வாரம் முதல் வாரந்தோறும் நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். சுமார் 80 மாணவர்களுக்கு ஓரிடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களோடு, தனியார் பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களும் இணைந்து பயிற்சி அளிக்க முன்வந்துள்ளனர்.
முதல் வாரத்தில் உயிரியல் பாடத்தில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் நன்றாக இருக்க வேண்டும். எனவே, மருத்துவராக விருப்பமுள்ள மாணவர்களை தொடக்கம் முதலே ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க உதவவேண்டும். குறைந்தபட்சம் பள்ளிக்கு ஒருவரையாவது தனிக்கவனம் செலுத்தி தயார்ப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT